விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் 2 போ் கைது
அந்தியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் மாரசாமி (40), விவசாயி. முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த இவரது உறவினா்களான செலம்பணன் (33), தனசேகா் (30), காா்த்திக் (25) ஆகியோா், மாரசாமியை கடந்த சனிக்கிழமை தாக்கினா்.
இதனால், மாரசாமி அறிவாளால் மூவரையும் வெட்டியதில் செலம்பணன், தனசேகா் காயமடைந்தனா். இந்த மோதலில் காயமடைந்த மாரசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா், காா்த்திக்கை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்நிலையில், ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செலம்பணன், தனசேகரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.