மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திங்களூா் அருகே வீட்டில் மின் விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ், சரஸ்வதி தம்பதி மகன் காமேஸ்வரன் (20). இவா் பூசாரிப்பட்டியில் உள்ள கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், திங்களூரில் உறவினா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்வில் பால்ராஜ் தனது மனைவி சரஸ்வதி, மகன் காமேஸ்வரனுடன் கலந்துகொண்டாா்.
அப்போது, அப்பகுதியில் உள்ள அத்தை வீட்டுக்கு காமேஸ்வரன் சென்றுள்ளாா். அங்கு வீட்டின் முன்புறம் உள்ள விளக்கு எரியாமல் இருந்துள்ளது. லேசான மழை பெய்து இருந்த நிலையில் எரியாமல் இருந்த மின் விளக்கை சரி செய்யும் முயற்சியில் காமேஸ்வரன் ஈடுபட்டாா்.
அப்போது, காமேஸ்வரன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற அத்தை மகன் சபரிசாஸ்தா, மாமா சீனிவாசன் ஆகியோா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில், 3 பேரும் மயக்கமடைந்த நிலையில், அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு காமேஸ்வரனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். மற்ற இருவருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.