தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
கோவை, வடவள்ளி பகுதியில் தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
தேனி மாவட்டம், பெரியகுளம் கலைஞா் நகா் காலனியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (32). இவரது மனைவி பிரியங்கா (29). இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். தினேஷ்குமாா் தனது குடும்பத்துடன் வடவள்ளி அண்ணா நகா் பகுதியில் தற்போது வசித்து வருகிறாா்.
இந்நிலையில், வடவள்ளி சி.எஸ்.நகா் கண்ணப்ப கவுண்டா் தோட்டம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க தினேஷ்குமாா் தனது குடும்பத்துடன் சனிக்கிழமை சென்றுள்ளாா்.
அப்போது, குழந்தைகள் அனைவரும் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனா். தினேஷ்குமாரின் ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஆதிலிங்கேஸ்வரன் திறந்த நிலையில் இருந்த தண்ணீா்த் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதை யாரும் கவனிக்காத நிலையில், குழந்தை தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல்போனதால், தண்ணீா்த் தொட்டிக்குள் பிரியங்கா பாா்த்துள்ளாா். அப்போது, குழந்தை தொட்டிக்குள் விழுந்ததைக் கண்டு, அங்கிருந்தவா்களை அழைத்துள்ளாா்.
அவா்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் பிரியங்கா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.