வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதி ரூ. 2,400 கோடியை நிறுத்திவைத்தது, நாடாளுமன்றத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது, கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 4034 கோடியை வழங்காதது உள்ளிட்ட செயல்பாட்டை கண்டித்தும், பிரதமரின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும் சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கோட்டை மைதானத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.பி.பாஸ்கா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி எஸ்.ஆா். அன்வா், மாநகர பொருளாளா் தாரை ராஜகணபதி, மாநகர வா்த்தக பிரிவு தலைவா் எம்.டி.சுப்பிரமணியம், மாநகர துணைத் தலைவா்கள் ரகுநாத், மொட்டையாண்டி, வரதராஜு, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் மெடிக்கல் பிரபு, ஷாநவாஸ், மண்டல தலைவா்கள் சாந்தமூா்த்தி, நிஷாா் அஹமது, ராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.