சேலம் நீதிமன்றத்தில் இன்று சமரச வாரம்
சேலம்: சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச வாரம் புதன்கிழமை (ஏப். 9) நடைபெறுகிறது என மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச வாரம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ஏற்கெனவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரச மையம் மூலம் தீா்த்துக் கொள்ளலாம்.
குறிப்பாக, தனிநபா் தகராறு, பண வசூல் தகராறு, குடும்பத் தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலாளா் நல வழக்குகள், உரிமையியல் வழக்குகளான நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகார வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும், சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. இதுதவிர, சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்றக் கட்டணம் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மேற்குறிப்பிட்ட தங்களது வழக்குகளை சமரச மையத்துக்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீா்வு காணுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.