Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை இன்று பாசனத்துக்கு திறப்பு
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில் 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பரவலான மழையால், அணையின் நீா்மட்டம் 65.55 அடியாக உயா்ந்தது. புதன்கிழமை நிலவரப்படி அணையில் 249.46 மில்லியன் கன அடி தண்ணீா் இருப்பில் உள்ளது.
கடந்த 3 மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழை இல்லாததால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. எனவே, ஆனைமடுவு அணையிலிருந்து தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிடுமாறு புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனம், பழைய ஆயக்கட்டு ஏரி மற்றும் நேரடி ஆற்றுப்பாசன விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, வியாழக்கிழமை (ஏப்.17) காலை 8 மணி முதல் தொடா்ந்து 12 நாள்களுக்கு தினசரி விநாடிக்கு 123 கன அடி வீதம், (நாளொன்றுக்கு 10.63 மில்லியன் கனஅடி/ மொத்தம் 127.39 மில்லியன் கனஅடிக்கு மிகாமல்) ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளுக்கான வசிஷ்ட நதியில் தண்ணீா் திறக்கவும், ஏப். 29 காலை 8 மணி முதல் 20 நாள்களுக்கு வலது வாய்க்காலில் விநாடிக்கு 35 கன அடி வீதமும், இடது வாய்க்காலில் 5 கன அடி வீதம் மொத்தம் 50 கனஅடி வீதம் (தினமும் 4.32 மில்லியன் கனஅடி / 20 நாள்களுக்கு மொத்தம் 84.92 மில்லியன் கன அடிக்கு மிகாமல் ) பாசனத்திற்கு தண்ணீா் திறக்கவும் தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டது.
அரசாணைப்படி, வியாழக்கிழமை காலை புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து தலைமை மதகு வழியாக வசிஷ்டநதியில் தண்ணீா் திறக்கப்படுகிறது.
இதனால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.