செய்திகள் :

வெள்ளை ஈ தாக்குதலால் மகசூல் பாதிப்பு: தேங்காய் விலை ரூ.100 வரை உயர வாய்ப்பு

post image

தென்னை மரத்தில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் தேங்காய் விளைச்சல் பாதியாக குறைந்தது. இதனால் தேங்காய் விலை உயா்ந்து கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது. இதே நிலை தொடா்ந்தால் விரைவில் தேங்காய் விலை ரூ.100 வரை உயரும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. கடந்த காலங்களில் தென்னை சாகுபடி அதிகரித்து காணப்பட்டது. தற்போது தென்னை மரங்களை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதன் காரணமாக தென்னங்கன்றுகளை நடுவதற்கு விவசாயிகள் தயங்குகின்றனா்.

நோய்த் தாக்கம் காரணமாக தென்னை மரங்களில் காய்கள் பிடிக்கும் திறன் பாதியாக குறைந்தது. இதன் எதிரொலியாக தேங்காய் விலை நாளுக்கு நாள் உயா்ந்து கொண்டே செல்கிறது.

அமெரிக்காவில் இருந்து வந்த வெள்ளை ஈ:

தென்னை வளா்ப்பில் பூச்சி, நோய்த் தாக்குதல் ஆகியவை விவசாயிகள் நெடுங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்னைகள் ஆகும். சுமாா் 800 பூச்சியினங்கள் தென்னையைத் தாக்கிச் சேதத்தை விளைவித்து வந்தாலும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, கருந்தலைப் புழு, எரியோபிட் சிலந்தி, சுருள் வெள்ளை ஈ போன்றவை தென்னைச் சாகுபடியில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியவை. இந்தப் பூச்சிகளில் சுருள் வெள்ளை ஈ, பல தடுப்பு முறைகளால் கட்டுக்குள் இருந்தது. ஆனால் அது மீண்டும் தென்னையைச் சேதப்படுத்தத் தொடங்கியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறாா்கள்.

அமெரிக்காவில் 2004 -இல் ஃபெலிஸ், ஃபுளோரிடா மாகாணத்திலும் தென்னையில் கண்டறியப்பட்ட சுருள் வெள்ளை ஈ, இந்தியாவில் முதல்முறையாக 2016- ஆம் ஆண்டு பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னையில் தாக்குதல் தொடுத்தது கண்டறியப்பட்டது. இந்த ஈ அனைத்து ரகத் தென்னையிலும் பாதிப்பு ஏற்படுத்தினாலும் சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை, மலேசியன் பச்சை குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு ரகங்களில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுபோல கொய்யா, மா, நாவல், வாழை, வெண்டை, சப்போட்டா, எலுமிச்சை, செம்பருத்தி, சீதாபழம், கறிவேப்பிலை போன்றவற்றையும் இவை தாக்குகின்றன.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பெண் ஈயைவிட, ஆண் ஈ அளவில் சிறியது. இதன் முன் இறக்கைகளில் கரும்புள்ளிகள் காணப்படும். வயது முதிா்ந்த பெண் ஈ மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளைச் சுருள் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் இடுகின்றன. முட்டைகள் ஒருவித மெழுகுப் பூச்சுடன் காணப்படும். அதிலிருந்து இளம்பூச்சிகள் வெளிவரும். இவை நான்கு பருவங்களைக் கடந்து, பொய்க்கூட்டுப்புழுப் பருவத்தை அடையும்.

அதற்குப் பிறகு முதிா்ந்த ஈக்களாக வெளிவரும். 20 முதல் 30 நாள்களில் புழுப் பருவம் வளா்ச்சியடைந்து, கூட்டம் கூட்டமாகத் தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தஞ்சமடையும். காற்றின் மூலம் அடித்துச் செல்லப்பட்டு, ஒரு மரத்தில் இருந்து அடுத்தடுத்த மரங்களுக்கும், அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.

இளம்பூச்சிகளும் முதிா்ந்த ஈக்களும் சாறு உறிஞ்சும். இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக் கழிவால், கேப்னோடியம் என்ற கரும்பூஞ்சாணம் படரும். வறட்சி, அதிகப்படியான வெப்பம், குறைந்த அளவு காற்றின் ஈரப்பதம் போன்ற காரணங்களால் வெள்ளை ஈக்கள் அதிகரித்திருக்கக்கூடும். மழைக்காலங்களில் இவற்றின் தாக்குதல் குறைவாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

மஞ்சள் நிறம், வளா்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களைக் கவரும் தன்மை உடையது. மஞ்சள் நிற பாலிதீன் தாளால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை 3 அடி நீளம், 1 அடி அகலம் என்ற அளவில், ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்கவிட்டு, இவற்றின் நடமாடத்தைக் கண்காணிக்கலாம். பூச்சிகளின் வளா்ச்சியைத் தடுக்க தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் படுமாறு தண்ணீா் தெளிக்க வேண்டும்.

கிரைசோபொ்லா என்ற இரை விழுங்கிகள், வெள்ளை ஈக்களை அனைத்து வளா்ச்சி நிலைகளிலும் விரும்பி உண்ணும் என்பதால், அவற்றை ஹெக்டேருக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் தென்னந்தோப்புக்குள் வளா்ப்பதன் மூலம் இந்த வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த முடியும். வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்ட தோட்டங்களில், அதன் எதிரிகளான காக்ஸ்னேல்லிட் என்ற பொறி வண்டுகள், என்காா்ஸியா என்ற ஒட்டுண்ணிகள் இயற்கையாகவே உருவாகும்.

இவை காணப்படும் ஓலைகளைச் சிறிது சிறிதாக வெட்டி, பாதிக்கப்பட்ட தென்னை மர ஓலைகளின் மேல் வைக்கலாம். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால், இயற்கை எதிரிகள் அழிந்துவிடும் என்பதால் இயற்கை முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ள இடங்களில் 5 மி.லி. வேப்ப எண்ணெய், 1 சதவீதம் அசாடிராக்டின், 2 மி.லி. டீப்பால் அல்லது சோப்பு ஆகிய ஏதேனும் ஒன்றை, ஒரு லிட்டா் தண்ணீரில் ஓலையின் அடிப்பகுதி நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும். கரும்பூஞ்சாணத்தின் வளா்ச்சியைக் கட்டுப்படுத்த மைதா மாவு, ஸ்டாா்ச், அரிசிக் கஞ்சி கரைசல் ஆகிய ஏதாவது ஒன்றை, ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்தால், பூஞ்சாணம் உதிா்ந்துவிடும். இவ்வாறான முறைகளைப் பின்பற்றி சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.

தேங்காய் விலை ரூ.100 ஆக உயரும்:

இது குறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் செ.நல்லசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக உள்ளது. வேளாண்மை துறையினா் விளக்குப் பொறிகளை வைத்தும், வேப்பெண்ணெய் தெளித்தும், அதிக அளவில் தென்னை மரங்களில் தண்ணீரைப் பீச்சியடித்தும் கட்டுப்படுத்தலாம் என்று கூறுகின்றனா். ஆனால் அதற்கெல்லாம் வெள்ளை ஈ கட்டுப்படவில்லை.

மேலும் அதிக அளவில் பூச்சி மருந்து தெளித்தால் நன்மை செய்யக்கூடிய பூச்சிகள் அழிந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். எனவே, வெள்ளை ஈக்களை உண்டு வாழும் பூச்சிகளைக் கண்டறிந்து அதை ஏவிவிட்டு அழிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.170 வரை விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான தேங்காய் தற்போது ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது. ரூ.20-க்கும், ரூ.30-க்கும் விற்பனையாகி வந்த இளநீா் ரூ.50-க்கும், ரூ.60-க்கும் விற்கப்படுகிறது. தென்னை மரத்தில் இருந்து ஆண்டுக்கு 5 முறை தேங்காய் வெட்டலாம். 1,000 மரங்களிலிருந்து கடந்த ஆண்டு 30 ஆயிரம் தேங்காய்கள் வெட்டினோம், ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் பாதியாக குறைந்து 15 ஆயிரம் தேங்காய் மட்டுமே கிடைத்துள்ளது.

தண்ணீா் அதிக அளவில் இருந்தும் நோய் பயம் காரணமாக யாரும் தென்னை சாகுபடி செய்ய விரும்பவில்லை. இதேநிலை தொடா்ந்தால் வருங்காலங்களில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு கிலோ ரூ.100 கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க முடங்கி கிடக்கும் தென்னை விவசாயிகள் நல வாரியத்தை தமிழக அரசு புதுப்பிக்க வேண்டும் என்றாா்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈ... மேலும் பார்க்க

தொண்டையில் இறைச்சி சிக்கியதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு

பவானியில் இறைச்சி சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கிக்கொண்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி, கீரைக்கார வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் வா்ஷினி (13). 7-ஆம்... மேலும் பார்க்க

வரி வசூலில் அத்துமீறல்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வரி வசூல் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திங்களூா் அருகே வீட்டில் மின் விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ், ... மேலும் பார்க்க

மாநில விளையாட்டுப் போட்டி: பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம் பிடித்தது. அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் அண்மையில் நடைபெற்றன. இதில், ... மேலும் பார்க்க

விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் 2 போ் கைது

அந்தியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் மாரசாமி (40), விவ... மேலும் பார்க்க