சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?
செய்திகளில் கடந்த சில நாள்களாக இடம்பெற்றுக்கொண்டிருந்த சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
ஏதாவது லஞ்சம், ஊழல் என்று குற்றச்சாட்டுகளா? வேறு ஏதாவது சிக்கலான பிரச்சினையா? அப்படியெல்லாம் எதுவும் இல்லை.
கடந்த வாரத்தில் தர்பூசணிப் பழம் சாப்பிட்டதால் வாய்ப்புண்கள் வந்ததாகக் கிடைக்கப் பெற்ற புகார்களின் பேரில், சென்னையில் கடைகளில் சோதனைகளை மேற்கொண்ட இவர், தர்பூசணியில் எத்தகைய கலப்படங்கள் செய்யப்படுகின்றன? என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் தகவல்களைத் தெரிவித்தார்.
நல்ல, பழுத்த பழமாகத் தோன்றுவதற்காகத் தர்பூசணிப் பழங்களில் ஊசி மூலம் (அடர்சிவப்பு நிறம் பெற) நிறமூட்டிகளும் கூடுதலான இனிப்புச் சுவையூட்டுவதற்காக சர்க்கரைப் பாகு அல்லது நீர் செலுத்தப்படுவது பற்றியும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயங்கள் ஆணையத்தின் தகவல்கள் பற்றியும் தெரிவித்துள்ளார்.
கடைகளில் நாம் வாங்கிச் சாப்பிடும் தர்பூசணிப் பழங்கள் தரமானவைதானா? எப்படிக் கண்டறியலாம்? எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம் விவரித்திருக்கிறார்.
ஒவ்வோர் ஆண்டும் தர்பூசணியில் நிறமூட்டுவது பற்றிய செய்திகள் வெளிவருவதும் பலர் அதைப் பேசுவதும் வழக்கமான ஒன்றுதான். இந்த ஆண்டில் தர்பூசணிப் பழங்கள் பற்றிய விழிப்புணர்வுத் தகவல்கள் மக்கள் மத்தியில் வழக்கத்தைவிடக் கொஞ்சம் கூடுதலாகப் பரவிவிட்டன போலும்!
ஆனால், இதன் காரணமாக தர்பூசணிப் பழங்களின் விற்பனை குறைந்துவிட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக விலையும் குறைந்துவிட்டதாகவும் எல்லாமே இந்த ‘விழிப்புணர்வு’ பரவியதால்தான் என்றும் வியாபாரிகளும் விவசாயிகளும் குற்றம் சாட்டினர். கோயம்பேடு சந்தையில் போராட்டம் நடத்திய வியாபாரிகள் சங்கத்தினர், தர்பூசணிப் பழங்களைப் போட்டுடைத்தனர். உணவுத் துறை அலுவலரின் 'தவறான தகவலால்'தான் இப்படியாகிவிட்டது என்றும் இந்தப் பிரச்சினையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு (முதல்வருக்கும்தான் எவ்வளவு பிரச்சினைகள்) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் ஆதரவு தெரிவித்து சில அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்டனர்.
பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்று தர்பூசணிகளை வாங்கவோ, சாப்பிடவோ மறுத்துவிட்டதால் விற்பனையும் விலையும் குறைந்துவிட்டனவா? அல்லது சந்தைக்கு தர்பூசணிப் பழங்களின் அபரிமிதமான வரத்து காரணமாக விலை குறைந்துவிட்டதா? என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை. தவிர, சென்னை மாநகரில் மட்டும்தான் இந்தப் பிரச்சினையா? இல்லை, அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பிரச்சினை நிலவுகிறதா? என்பதும் தெளிவாக இல்லை.
இந்த சர்ச்சைகளுக்கு இடையே சில நாள்கள் முன், சென்னையில் பிரியாணிக் கடை போன்ற சில இடங்களிலும் உணவுக் கலப்பட பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார் அந்த அலுவலர்.
இந்த நிலையில்தான் சனிக்கிழமை காலை சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் சதீஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
உள்ளபடியே தர்பூசணிப் பழங்களில் ஊசிகளின்வழி நிறமேற்றுவது என்பது திடீரென எங்கிருந்தோ வந்து குதித்ததைப் போன்ற புதிதான ஒன்றல்ல. 10, 12 ஆண்டுகளுக்கு முன், கோடைகளில் மக்களை ஈர்க்கும் தர்பூசணிப் பழங்களில் எவ்வாறு நிறமி ஏற்றப்படுகிறது என்பது படம் பிடித்துத் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது.
தர்பூசணிகளில் இப்போதும் நிறமி ஏற்றப்பட்டிருக்கலாம்; ஏற்றப்படாமலும் இருக்கலாம். ஒருவேளை இப்படியெல்லாம் நிறமேற்றுவதையே வியாபாரிகள் மறந்துவிட்டார்கள் என்றுகூட நாமும் நம்பலாம்; தவறில்லை.
இப்படியெல்லாம் நடைபெறலாம்; மக்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவதில் என்ன தவறு இருந்துவிட முடியும்?
பழத்தில் நிறமேற்றப்பட்டிருக்கிறது என்பதை டிஸ்யூ தாளை ஒட்ட வைத்து எப்படிக் கண்டுபிடிப்பது? பழத்தில் ஏதாவது கலப்படம் செய்யப்பட்டிருந்தால், சுவையூட்டப்பட்டிருந்தால் எப்படித் தெரிந்துகொள்வது? என்று விவரிப்பதில் என்ன தவறு இருந்துவிட முடியும்?
சோதனைகளில் நிறைய கெட்டுப்போன, எலிகள் கடித்த, அழுகிப்போன பழங்களை அழித்திருக்கிறோம். எனவே, வெட்டி வைத்திருக்கும் பழத் துண்டுகளைத் தவிர்க்கப் பாருங்கள் (ஒருவேளை அழுகிய பகுதிகளை அகற்றிவிட்டுத் துண்டுகளாக நறுக்கியிருக்கலாம்); முழுப் பழமாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது என்பதில் என்ன தவறு இருந்துவிட முடியும்? (எலிகள் கடித்திருக்கும் பழங்களின் துண்டு என்றால் ஒருவேளை எலிக்காய்ச்சல் வர நேரிடலாம்!).
பழத்தில் ஏதேனும் கலக்கப்பட்டிருந்தால் வாய்ப்புண் வரலாம் (இந்தப் புகார் காரணமாகத்தான் சென்னையில் பழக்கடைகளில் அவர் சோதனைகளே மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது), ஒவ்வாமை, ஆஸ்துமா அதிகரிப்பு, வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம் என்றெல்லாம் ஒருவர் சொல்வது, அதுவும் உணவுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவரே சொல்வது, எத்தகைய குற்றத்தின் கீழ் வரும்?
இந்த உணவுத் துறை அலுவலர் தெரிவித்த கருத்துகள் வைரலாகப் பரவியதால்தான் ஒட்டுமொத்தமாக தர்பூசணிப் பழங்களின் விற்பனையே முடங்கிப் போய்விட்டது என்று கூறுவது சரிதானா? இத்தனைக்கும் இதே அலுவலர் சதீஷ்குமார், செய்தியாளர்களை எல்லாம் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து, 'தமிழ்நாட்டில் எங்கேயும் தர்பூசணிப் பழங்களில் நிறமூட்டி ஏற்றப்பட்டதாகத் தகவல் இல்லை. ஏற்றப்பட்டதாகவும் நான் தெரிவிக்கவில்லை. நம்ம ஊர், நல்ல ஊர். நம்ம ஊர்க்காரர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள்தான்' என்றொரு பேட்டியும் தந்திருக்கிறார். ஏனோ, இந்தப் பேட்டி வைரலாகவில்லை போல!
தர்பூசணிப் பழங்கள் கிடக்கட்டும், விடுங்கள்!
நம்ம நாட்டில் அல்லது நம்ம மாநிலத்தில் வேறு எதிலுமே யாருமே கலப்படம் செய்ததில்லையா? செய்வதில்லையா? இந்தக் கலப்படங்கள் பற்றியெல்லாம் நம்ம அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எல்லாம் தெரியுமா? தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாததைப் போல இருக்கிறார்களா?
இந்தப் பழங்கள் ஒவ்வொன்றும் பழுப்பதற்கு என்ன பாடு படுகின்றன? குழந்தைகளுக்குப் பழங்களைக் கொடுங்கள், ஒன்றும் செய்யாது என்பார்கள். இப்போதெல்லாம் அப்படி நம்பி எந்தப் பழத்தையும் கொடுத்துவிட முடியுமா? உள்ளபடியே, பழங்களில் பலவற்றையும் தானாகப் பழுக்க விடுவதேயில்லை.
பச்சைப் பசேலென இருக்கும் வாழைத் தார்களுக்குக் கடைக்காரர் ஏதோவொரு ஸ்பிரே அடித்துக் கொடுத்தனுப்புகிறார். வீட்டுக்குச் செல்வதற்குள் மஞ்சளாக நிறம் மாறிவிடுகிறது; மறுநாள் அனைத்தும் பழுத்தும்விடும்.
இயல்பாக, தானாகப் பழுக்கும் மாம்பழங்களைப் பார்ப்பதென்பது அரிதிலும் அரிதாகிக் கொண்டே இருக்கிறது. மாம்பழ விளைச்சல் காலத்தில் கார்பைட் கல் வைக்காமல் பழுத்த பழங்களைக் காணவே இயலாது. டன் டன்னாக கார்பைட் வைத்த பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. கார்பைட் வைத்துப் பழுக்கச் செய்யப்பட்ட பழங்களை உண்பதால் நேரிடும் மோசமான விளைவுகள் பற்றி வயிற்றுப் பிரச்சினையுள்ளவர்களுக்கும் குழந்தைகளுக்கும்தான் தெரியும். இதற்காக, இதுவரை எத்தனை வியாபாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? எத்தகைய தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன?
திராட்சைப் பழங்கள் நீண்ட நாள்களுக்கு அழுகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தோட்டங்களில் கொடிகளில் இருக்கும்போதே டப்பாக்களில் நிரப்பப்பட்ட ஏதோவொரு திரவத்தில் திராட்சைக் குலைகள் முக்கிவிடப்படுகின்றன.
வாழைக்காய்கள் உதிராமல் இருக்கவும் கெட்டுப் போகாமல் இருக்கவும் வாழை மரங்களிலேயே (அல்லது வாழைக் குலைகளில்) ஊசி மூலம் ஏதோ மருந்தைச் செலுத்தும் வழக்கமும் இருக்கிறது.
இன்னும் கொஞ்சம் வயற்காட்டுப் பக்கம் போனால், பூச்சிகொல்லி, ரசாயன உரங்கள் இல்லாமல் எதுவுமே இல்லை. உடலுக்கு மிகவும் நல்லது என்ற கூறப்படும் கீரைகளுக்கே பறிப்பதற்கு இரு நாள்கள் முன்னர்கூட மருந்தடிக்கத்தான் செய்கிறார்கள்.
காய்கள், பழங்கள் என்றால் அழுகத்தானே வேண்டும்? (பால் என்றால் கெட்டுப்போகத்தானே வேண்டும்?) சில நாள்களில் அழுக வேண்டிய பழங்கள் எல்லாம் எப்படி வாரக் கணக்கில் அழுகாமல் இருக்கின்றன? திருமண வரவேற்பொன்றில் தாம்பூலப் பையில் இட்டுக் கொடுக்கப்பட்ட ஆரஞ்சு மாதிரியான ஒரு பழம் ஒரு மாதம்போல கவனிக்காமல் இருந்துவிட்டது; பிறகு எடுத்துப் பார்த்தால் கெட்டுப்போகவில்லை! எப்போதுதான் அழுகும் என்று வைத்திருந்து பார்த்தால் இன்னொரு வாரம், பத்து நாள்களுக்குக் கெட்டுப் போகவில்லை. பிறகுதான் ஒரு மூலையில் அழுகத் தொடங்கியது.
இந்த ஆப்பிள்கள், அடடா, எல்லாம் தனித் தனிக்கதைகள். தொடர்ந்து, இவற்றைத் தெரிந்துகொண்டும் பேசியும் வாசித்துக்கொண்டும் இருந்தால் ஒருவேளை எதையுமே தொட முடியாமல்கூட போய்விட நேரிடலாம். பட்டினிதான் கிடக்க வேண்டியிருக்கும்!
இப்படியாக எவ்வளவோ பழங்கள் இருக்கின்றன, ஊறுகாய், பால், நெய், தானியங்கள், உணவுப் பொருள்கள் எவ்வளவோ இருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் எவ்வளவு ரசாயனங்களைத்தான் தெரிந்தும் தெரியாமலும் நாம் தின்றுகொண்டிருக்கிறோம்?
ஏதோ தர்பூசணிப் பழங்களைப் பற்றி அபூர்வமாக உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் பேசப் போக, எக்குத்தப்பாக எங்கோ, எப்படியோ பற்றிக் கொண்டுவிட்டது என்கிறார்கள். விவசாயிகள், வியாபாரிகள் போராட்டத்தால் அல்லது எதிர்ப்பால் அல்லது இவை எதற்குமே சம்பந்தமில்லாமல் ‘வழக்கமான பணி நிமித்தம்’ காரணமாக இந்த உணவுத் துறை அலுவலர் இடம் மாற்றப்பட்டு விட்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற எந்த அரசு அலுவலராவது இனிமேல் கலப்படம் பற்றியெல்லாம் எதையாவது கருத்துக் கூற முன்வருவாரா? மக்களை விழிப்புணர்வுடன் இருங்கள் என்று எச்சரிக்கத்தான் முன்வருவாரா? நரி இடம் போனால் என்ன? வலம் போனால் என்ன? நம்ம மேலே விழுந்து பிடுங்காமல் விட்டால் போதும் என்றுதானே நினைப்பார்கள்?
வியாபாரிகள் முக்கியம், வியாபாரிகளுக்காகக் கவலைப்படுகிறார்கள், விவசாயிகள் முக்கியம், அபூர்வமாக விவசாயிகளுக்காகவும் கவலைப்படுகிறார்கள்; அல்டிமேட்டாக இருக்கிற மக்களைப் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்களா? ஒருவேளை மந்தையாக இருப்பதால் மக்கள் அவ்வளவு முக்கியமில்லையா?
டெயில் பீஸ்: அணுகுண்டு வீசி மட்டும்தான் உலகத்தை ஆட்டிப் படைக்க முடியுமா? போர்களை நடத்திதான் குலைக்க முடியுமா? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வீசிய வரி குண்டுகளால் இப்போது உலக நாடுகளின் வணிகச் சூழலே இப்போது கலங்கிப் போயிருக்கிறது, இப்போதே பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கிறது. ஃபுல் எபெக்ட் என்னவென்று விரைவில் தெரியும்!