சொல்லப் போனால்... நகைக் கடன் ஏலங்களும் லட்சம் கோடி தள்ளுபடிகளும்!
வாராக் கடன் அல்லது செயல்படாத சொத்துகள் என்ற பெயரில் கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் வங்கிகளால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ. 16.35 லட்சம் கோடிகள்!
இந்தத் தகவலை மக்களவையில் கேள்வியொன்றுக்கு அளித்த பதிலில் நாட்டின் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். உடனே ரைட் ஆஃப் (write-off) வேறு, வெய்வ் ஆஃப் (waive-off) வேறு என்றொரு பட்டிமன்றத்துக்குக் கொஞ்சம் பேர் வந்துவிடுவார்கள். வேறுவேறே. ஆனால், நம்மைப் போன்ற எகானமி அறியாத எளியவர்களைப் பொருத்தவரை எல்லாம் ஒன்றுதான் – யானை வாயில் போன கரும்பு அல்லது வெல்லம். திரும்பி வராது, வரப் போவதில்லை!
2019 நிதியாண்டில்தான் அதிகளவாக ரூ. 2.36 லட்சம் கோடிகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன; இந்தப் பத்தாண்டுகளில் ரொம்பக் குறைவாகத் தள்ளுபடி செய்யப்பட்டது 2015 நிதியாண்டில் – அதுவும்கூட ரூ. 58,786 கோடிகள்!
வங்கிகளிடமிருந்து இத்தனை லட்சம் கோடிகளைக் கடனாகப் பெற்றுத் திருப்பித் தராத எந்தவொரு நிறுவனத்தை அல்லது தொழிற்சாலையை அல்லது வணிக – சேவை நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் எவரொருவரும் இந்த ‘நஷ்டத்தின்’ காரணமாகத் தெருவுக்கு வந்து அலைந்துகொண்டிருப்பதாகவோ, தனியாகவோ குடும்பத்துடனோ தற்கொலை செய்துகொண்டதாகவோ செய்திகள் எதுவுமில்லை.
ஆனால், இப்படியெல்லாம் ‘வங்கிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு’ கடன்களை வாங்கிய பின் - தற்போது மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் - நிறைய பேர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று கூலாக இளைப்பாறிக் கொண்டிருக்கின்றனர். கைக்குள் போட்டுக்கொண்டு என்பதில் பெரிதாகத் தவறில்லை; வங்கிகளில் எளிய நபர் ஒருவர் எதற்காகவாவது கடன் வாங்குவது என்பது எவ்வளவு கடினம்? என்பது ஒரு முறை கடன் வாங்கச் சென்றவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அடேயப்பா, எத்தனை கையெழுத்துகள்? எத்தனை உறுதிமொழிகள்? தொழிலும் வேண்டாம், கடனும் வேண்டாம் என்று வெறுத்துப் போய்விடும். அதுவும் கொஞ்சம் அழுக்கான சட்டை அணிந்திருப்பவர்களிடம் வங்கியாளர்கள் நடந்துகொள்ளும் முறை! அப்பப்பா! இன்னொரு பக்கம் லட்சங்கள், கோடிகள் என்று தனித்தனி அல்ல, லட்சங் கோடிகளில் தீபாவளியுமில்லாமல் பொங்கலுமில்லாமல் விழாக் காலத் தள்ளுபடிக் கொண்டாட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
பணக்காரர்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இவ்வளவு தாராளம் காட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கமும் வங்கிகளும்தான் ஏழை எளிய மக்களைக் கொலையாகக் கொன்றுகொண்டிருக்கிறார்கள் – கேஒய்சி புதுப்பிப்பில் தொடங்கிப் புதிது புதிதாக விதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும் நிபந்தனைகள் விதிப்பதன் மூலமும்.
ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல, நடுத்தர வகுப்பு மக்களும்கூட ஏதோ கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டுப் பணம் சேர்த்துக் கொஞ்சம் நகைகளை வாங்கி வீடுகளில் வைத்திருப்பார்கள். அவசரம் ஆத்திரம் என்றால் அருகிலுள்ள அடகுக் கடைகளிலோ, அல்லது கொஞ்சம் படித்த, விவரம் தெரிந்தவர்கள் என்றால் வங்கிகளிலோ அடகுவைத்துச் செலவுக்குப் பணம் திரட்டுவார்கள் (அடகுக் கடைக்காரர்களின் அணுகுமுறை தனி). வங்கிகளில் அவ்வப்போது வட்டியைச் செலுத்துவார்கள். மறு அடகு வைத்து, பணம் கிடைக்கும்போது நகைகளை மீட்டுக்கொண்டு விடுவார்கள். மீண்டும் தேவையேற்படும்போது நகைகள் மீண்டும் (அடகுக்கடைகளுக்குப்) படிக்கப் போகும்!
நாட்டில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது டிசம்பரில் நகைக் கடன்கள் 71 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஏப்ரலில் நகைக் கடன் ரூ. 1.01 லட்சம் கோடிகள்; டிசம்பரில் ரூ. 1.72 லட்சம் கோடிகள்! அடுத்த ஒரு மாதத்தில், 2025 ஜனவரியில் 76.9 சதவிகிதமாக உயர்ந்து ரூ. 1.79 லட்சம் கோடிகளாகிவிட்டது (இந்தக் கணக்கெல்லாம் வங்கிகள் சம்பந்தப்பட்டவைதான். நம்ம ஊர்த் தெருக்களில் இருக்கும் அடகுக்கடைகள் எதுவும் இந்தக் கண்காணிப்புக்குள்ளேயே வரா).
திடீரென பத்து மாதங்களில் நகைளை அடகுவைத்து மக்கள் பெறும் கடன்கள் 76 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றன என்றால், என்ன காரணங்கள்? ஏதாவது தொழிற்புரட்சி ஏற்பட்டு, மக்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வங்கிகளில் கொண்டுபோய் நகைகளை அடகுவைத்துப் பணம் திரட்டி, வீதிதோறும் தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் தொடங்கிவிட்டிருக்கிறார்களா, என்ன?
மற்ற கடன்களுக்கு எல்லாம் வட்டி விகிதங்கள் அதிகம் என்பதால், குறைந்த வட்டி என்பதுடன் எளிதில் பெற முடியும் என்பதையும் கருத்தில்கொண்டு மக்கள் நகைக்கடன்களைப் பெறலாம். நகைகளை அடகுவைத்துப் பணம் பெற சிபில் ஸ்கோர் மாதிரியான சங்கடங்கள் இல்லை. விசேஷங்கள் மற்றும் குடும்பத் தேவைகளுக்காகக் கடன்களைப் பெற்றிருக்கலாம்.
இவையெல்லாமும் காரணங்களாக இருக்கலாம். ஆனால், உள்ளபடியே தற்போதைய பொருளாதாரச் சூழலில், வாழ்க்கையை நகர்த்த முடியாமல், வரவுக்கும் செலவுக்கும் ஈடுகட்ட முடியாமல், வீட்டுச் செலவுகள், மருத்துவச் செலவுகள், படிப்புச் செலவுகள்... என்றபடி இருக்கிற சேமிப்புகள் கரைய, செலவைச் சமாளிக்கவே ஏழை எளிய, நடுத்தர மக்களின் வீடுகளிலுள்ள நகைகள் வங்கிகளையும் அடகுக்கடைகளையும் நோக்கிச் செல்வதில் வேகம் பெற்றுள்ளன. நாடு முழுவதும் தனியார் அடகுக்கடைகளில் வாசம் செய்யச் சென்றிருக்கும் நகைகளின் / நகைக்கடன்களின் அளவைக் கணிக்கவோ கணக்கிடவோ முடிந்தால் மக்களின் பொருளாதார நிலைமையை இன்னமும்கூட சிறப்பாகத் தெரிந்துகொள்ள இயலும் (இதுவரையிலும் இதற்கோர் ஏற்பாடே இல்லை; எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி போட்ட போட்டில் கதிகலங்கிப் போய்விட்டார்கள் அடகுக்கடைக்காரர்கள். நெருக்கடி நிலையின்போது விளைந்த இந்த நன்மை பற்றித் தனியாக எழுத வேண்டும்). அடகுக் கடைகளில் எல்லாமே பணப் பரிமாற்றம்தான். டிஜிட்டல் நஹி ஹோ கயா. இதையே சப்தமாகச் சொன்னால், ஏதோ அவசரத்துக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள், இங்கேயும் வந்து மண்ணள்ளிப் போட்டுவிடாதீர்கள் என்ற குரலைக் கிராமப்புறங்களிலிருந்தும் குடிசைப் பகுதிகளிலிருந்தும் கேட்கக் கூடும்.
கிடக்கட்டும், மறுபடியும் வங்கிகளுக்கு வருவோம். எங்கேயோ ஏதோ தவறு நேர்ந்துவிட்டதாம். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துகிறார்களாம். யாருக்காக என்று தெரியவில்லை (வங்கிப் பக்கம் வராதீர்கள்; எல்லாருமே தனியார் அடகுக்கடைகளுக்கே சென்றுவிடுங்கள் என்று வழிகாட்டுகிறார்களோ, என்னவோ?). வங்கிகளில் நகைகளை அடகுவைத்து இக்கட்டுகளைச் சமாளித்துக் கொண்டிருந்தவர்களுக்குப் கொள்கை விதி என்ற பெயரில் புதிதாகவொரு இம்சையை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.
வங்கிகளில் இவ்வளவு காலமாக, ஆண்டுக்கு ஒரு முறை வட்டியை மட்டும் செலுத்திவிட்டு நகைக் கடன்களைப் புதுப்பித்துக்கொண்டுவிடலாம். நகைகளும் கடனும் அப்படி அப்படியே தொடரும். இப்போதைய புதிய விதியின்படி, வட்டி மட்டுமல்ல, முழு அசலையும் சேர்த்துச் செலுத்தி, நகையை மீட்க வேண்டும், பிறகு மறுபடியும் அடகுவைத்துப் பணத்தைப் பெற வேண்டும். இப்படி எல்லாமே ஆண்டுதோறும் ரிப்பீட்.
கையில் பணம் இல்லாமல்தான் அடகுவைத்துப் பணம் புரட்டுகிறோம். ஒவ்வோராண்டும் எங்கிருந்து இவ்வளவு தொகையைப் புரட்டி வங்கியில் வட்டியுடன் செலுத்தி மறுபடியும் அடகுவைப்பது? கூடவே இன்னொரு தொல்லை. அப்படியே முழுத் தொகையையும் செலுத்தி அடகு வைத்திருந்த நகையைத் திருப்பினாலும் மீண்டும் உடனே அடகுவைத்துப் பணம் பெற முடியாது. புதிய விதிப்படி ஒரு நாள் காத்திருந்து மறுநாள்தான் வங்கியில் அடகுவைக்க முடியுமாம்!
நகையை மீட்கவும் மறு அடகு வைக்கவும் ஒவ்வோராண்டும் முழுத் தொகைக்கு எங்கே செல்வது? இந்த இரண்டு நாள்களுக்காக மீட்டர் வட்டி, சூடுவட்டி என்று மறுபடியும் யாரிடமாவது சென்று பெற வேண்டியதுதான். பிறகென்ன, சலித்துப் போய், இவ்வளவு கஷ்டப்படுவதற்குப் பதிலாக ஒரேயடியாக தனியார் அடகுக்கடைக்காரர்களிடமே நகைகள் இருந்துவிட்டுப் போகட்டும்; எப்போது வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம், திருப்பிக் கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மக்களை நகர்த்துவதாக இருக்கிறது எல்லாமும்.
கடந்த அக்டோபரில் நடைமுறைக்கு வந்தபோதிலும் கல்விக் கட்டண காலம் தொடங்கியுள்ள இப்போதைய சூழ்நிலையில் நகைக்கடன் வெப்பம் நன்றாகவே உணரப்படுகிறது. கடந்த ஆண்டு அடகுவைத்த நகைகளை எல்லாம் மொத்த பணமும் செலுத்தி மீட்க வேண்டும். இல்லாவிட்டால் விதிப்படி மறுநாளே ஏலத்துக்கு விடுவதற்கான நடைமுறைகளை வங்கி தொடங்கிவிடலாம். பிறகு நகைகளை மீட்க முனைந்தால் அதற்கென்றும் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
ம். இன்னொரு பக்கம் ஏதேதோ பெயர்களில் கடன்களை வாங்கிக்கொண்டு, என்னென்னவோ சொல்லி ஏமாற்றுவோருக்கு லட்சம் கோடிகளில் கடன் தள்ளுபடிகள் தொடருமாம். மார்ச் முடிந்த பிறகு இந்த நிதியாண்டில் பெரு நிறுவனங்களுக்கும் பெருங் கோடீசுவரர்களுக்கும் வங்கிகளால் எத்தனை லட்சம் கோடிகள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற தகவல் வெளியாகலாம்.
மகாராஷ்டிரம் மட்டுமல்ல, நாடு முழுவதும் வேளாண் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாததால் எத்தனை ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்? கூட்டுறவுக் கடன்களைச் செலுத்த இயலாததால் எவ்வளவு பொருள்கள் ஜப்தி செய்யப்படுகின்றன? சில லட்சம் கடன்களுக்காக எத்தனை குடும்பங்கள் மொத்தமாகத் தற்கொலை செய்துகொள்கின்றன? எவ்வளவு சொத்துகள் ஏலத்துக்கு வருகின்றன? (இவற்றுக்கெல்லாம்கூட மத்திய அரசிடம் தரவுகள் இருக்க வாய்ப்பில்லை; மாநில அரசுகளிடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும் என்பார்கள்!).
நமக்குதான் கைமாத்து, நகைக் கடன், அக்கம்பக்கத்துக் கடன், சீட்டுக் கடன், வட்டிக் கடன் என்று வரிசை கட்டுகிறது என்றால்... நாட்டின் கடன் நிலவரம் இவற்றையெல்லாம்விட மோசம்போல. தொகையைப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது!
2025 மார்ச் 31 நிலவரப்படி உள்நாட்டுக் கடன்கள் மற்றும் கடப்பாடுகள் – ரூ. 175 லட்சம் கோடிகள், வெளிநாட்டுக் கடன்கள் – ரூ. 6.18 லட்சம் கோடிகள். ஆக, மொத்தம் ரூ. 181 லட்சம் கோடிகள்!
2026 மார்ச் 31-ல் என்னவாக இருக்கும்? உள்நாட்டுக் கடன்கள் மற்றும் கடப்பாடுகள் – ரூ. 190 லட்சம் கோடிகள், வெளிநாட்டுக் கடன்கள் – ரூ. 6.63 லட்சம் கோடிகள். ஆக, மொத்தம் ரூ. 196 லட்சம் கோடிகள்! எல்லாம் மத்திய நிதி நிலை அறிக்கையில் தரப்பட்டுள்ள தகவல்கள்தான்.
சரி, உலகத்தின் கடன்? பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (ஆர்கனைசேஷன் ஃபார் எகானமிக் கோஆபரேஷன் அன்ட் டெவலப்மென்ட்) தெரிவித்துள்ளபடி, 323 டிரில்லியன் டாலர்கள்; ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. நம்ம ரூபாயில் நாமே கணக்குப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான், கொஞ்சம் கஷ்டம் என்றாலும்!
“விடங்கொண்ட மீனைப்போலும் வெந்தழல் மெழுகுபோலும்
படங்கொண்ட பாந்தள்வாயிற் பற்றிய தேரைபோலும்
திடங்கொண்ட ராமபாணம் செருக்களத் துற்றபோது
கடன்கொண்டார் நெஞ்சம்போலும் கலங்கினான் இலங்கைவேந்தன்”
நாட்டில் கோடிக்கணக்கானோர் நகைக் கடன்களைப் போல பல கடன்களைப் பெற்று இலங்கை வேந்தனைப் போல ஒருபக்கம் நெஞ்சம் கலங்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கொஞ்சம் பேர் லட்சம் கோடி தள்ளுபடிகளில் கொழித்துக்கொண்டிருக்கிறார்கள்! எய்பவர்களுக்குத்தான் வெளிச்சம்!
‘தராவு!’
யாருக்கும் எப்போதும் தரப்படாத ஒன்றுக்குத்தான் தரவு என்று பெயரோ என்னவோ தெரியவில்லை.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 45 நாள்கள் நடைபெற்ற இவ்வளவு பெரிய கும்ப மேளாவுக்கு எத்தனை கோடி பேர் வந்தார்கள், புனித நீராடினார்கள், எத்தனை வி.ஐ.பி.க்கள், அலுவலர்கள், நடிகர்கள், நடிகைகள், வந்தார்கள், படகோட்டிகள் எவ்வளவு சம்பாதித்தார்கள், எவ்வளவு வருமானம் வந்தது என்று எல்லாமே துல்லியமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது; தெரிவிக்கவும்படுகிறது.
ஆனால், கும்பமேளா நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை? காயமுற்றவர்கள் எத்தனை பேர்? எத்தனை குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது? ஊஹூம். எதுவுமே தெரியாது, எல்லாமே மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று நாட்டை ஆளும் மன்றத்திலேயே உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துவிட்டார்.
இத்தனைக்கும் ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் குளித்துச் சென்றார்கள் என்ற எண்ணிக்கையை உத்தரப் பிரதேச அரசு தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தது. நிறைவில் 66.3 கோடி பேர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டது (ஒட்டுமொத்த இந்தியாவின் மக்கள்தொகை 145 கோடி!)
மகிழ்ச்சி, ரொம்ப மகிழ்ச்சி!
இத்தனை கொடுமைகளுக்கு நடுவேதான் வயிற்றெரிச்சலாக சில நாள்களுக்கு முன் உலக மகிழ்ச்சிகர அறிக்கை வெளிவந்திருக்கிறது. மொத்தமே 147 நாடுகள் இருக்கிற மகிழ்ச்சி வரிசையில் இந்தியாவின் இடம் – 118! எட்டாவது ஆண்டாகத் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது பின்லாந்து. சொன்னால், அவையெல்லாம் சின்ன நாடுகள், நாம என்ன அப்படியா? எவ்ளோ பெரிய நாடு? எவ்ளோ மக்கள்? என்று வந்துவிடுவார்கள். ஆனால், இந்த வரிசையில் நம்மைவிட கொஞ்சூண்டு குறைவான மக்கள்தொகை கொண்ட சீனா இருப்பது 68-வது இடத்தில்!