செய்திகள் :

இப்படியும் ஒரு வழக்கு... கவிஞர் இம்ரான் பிரதாப்கரி! கவிதைதான் குற்றம் -19

post image

நாள்: 29டிசம்பர் 2024

இடம்: அகமதாபாத், குஜராத்.

நிகழ்வு: மாநில சட்டமன்ற முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அல்தாஃப் ஜி காஃபி பிறந்தநாள்விழா.

பிறந்தநாளையொட்டி, ‘சஞ்சரி கல்வி  அறக்கட்டளை’ தன்னார்வத் தொண்டு நிறுவனம் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு இலவசத் திருமணங்களை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரை சிறப்பான முறையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவரும் உள்ளூர் அல்தாஃப் ஜி காஃபியும் நிகழ்ச்சியில் நுழைந்தபோது, 'ஏ (ஹை) கூன் கே பியாசோ பாத் சுனோ..' பாடல் இசைக்கப்பட்டது. இந்தப் பாடலையும் பின்னணியில் இணைத்து அதன் விடியோவும் தயாரிக்கப்பட்டுப் பதிவிட அது சமூக ஊடகங்களில் வைரலானது.

‘ஏ கூன் கே பியாஸ் பாத் சுனோ…’ என்ற கவிதைப்பாடலின் பின்னணியில் சிறப்பு விருந்தினர் அழைத்து வரப்படும் விடியோ  46 விநாடிகள் மட்டுமே ஓடும். அந்த விடியோ கிளிப்பை சிறப்பு விருந்தினர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் – ‘எக்ஸ்’ ஹேண்டிலில் - பதிவேற்ற, முதல் நாளிலேயே லட்சக்கணக்கானோர் கண்டு களித்து, ஆயிரக்கணக்கில் (ஷேர்) பகிர்வுகளை நிகழ்த்தினர்.


சிறப்பு விருந்தினர்: உ.பியில் வசித்து வரும் இம்ரான் பிரதாப்கரி. புகழ் பற்ற உருதுக் கவிஞர் (வயது  37). காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவின் தேசியத்தலைவர் (2021முதல்). மகாராஷ்டிரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் (2022 முதல்).

சரி, விஷயம் என்ன என்கிறீர்களா? வாங்க...

இம்ரான் பிரதாப்கரிசமூக ஊடகத்தில் பதிவேற்றிய மேற்சொல்லப்பட்ட 46 வினாடி விடியோவிலுள்ள கவிதைதான் குற்றமாம்.

மேல் விவரங்களைக் கேட்கிறீர்களா?

அகமதாபாத், ஜாம்நகர் காவல் நிலையப்பகுதியில் வசித்துவரும், வழக்குரைஞர் அலுவலகக் குமாஸ்தா கிஷன் நந்தா. இவர் ”இம்ரான் பிரதாப்கரி வெளியிட்டுள்ள விடியோவில், கூட்டத்தில் கைகளை அசைத்தபடி அவர் நடந்து செல்லும்போது அவருக்கு மலர் தூவப்படுவது அந்த கிளிப்பில் பதிவாகியுள்ளது. பின்னணியிலோடும் கவிதை மொழி, ஒரு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இரு சமூகங்களுக்கு இடையே கிளர்ச்சி மற்றும் பகைமையை பரப்புவதாகவும் உள்ளது.

மேலும், ஆத்திரமூட்டுவதாக, தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக, மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக மற்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது. ஆகவே, இம்ரான் பிரதாப்கரி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று ஜாம்நகர் சிட்டி ஏ-டிவிஷன் காவல் நிலையத்தில்3, ஜனவரி2025-ல் பேரடுக்குப் புகார் அளித்தார். 

மத நல்லிணக்கத்துக்குப் ‘புகழ்’  பெற்ற மாநிலமல்லவா, குஜராத்? மறுகணமே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது. புகாரளித்த வழக்குரைஞர் அலுவலகக் குமாஸ்தா கிஷன் நந்தா, புகார் பதிவு செய்துஎஃப்.ஐ.ஆர் போட்ட ஜாம்நகர் சிட்டி ஏ-டிவிஷன்காவல் நிலைய அதிகாரி ஆகியோர் உருது மொழி விற்பன்னர்களாக இருந்திருக்கக் கூடும். அப்படி விற்பன்னர்களாக இருந்திருக்காவிட்டால் அந்த உருது மொழிக்கவிதை குற்றம் எனக் கண்டறிந்திருக்க முடியுமா? 

“மதம், இனம், தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் என்ற வகையில், மதக் குழு அல்லது அவர்களின் நம்பிக்கைகளை அவமதித்தல், பொதுமக்கள் அல்லது பத்துக்கும் மேற்பட்ட நபர்களுள்ள குழுவினரால் குற்றம் செய்யப்படுமாறு தூண்டுதல், இவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கச் செய்யும் கவிதையாக இது உள்ளது” என  ‘ஆய்ந்தறிந்து தேர்ந்து தெளிந்த’ குற்றச்சாட்டுடன் மகாராஷ்டிர மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப்கரி மற்றும் இருவர்மீது புதிய இந்திய தண்டனைச் சட்டம் - பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன் பல பிரிவுகளைப் பயன்படுத்தி (இதில் பிரிவு 196 மத அல்லது பிற அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் என்பது), மேலும் 197 (1), 302, 299, 57 ஆகிய பல பிரிவுகளின் கீழ்  ஜாம்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்க முடியுமா?

இணையத்தில் முயன்று தேடி, அக்கவிதையின் உருது வரிகளை ஒருவழியாகக் கண்டடைந்து  ’நம்பத்தகுநிலையிலா’ கூகுள் மொழி பெயர்ப்புக்கு உட்படுத்தி - ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்பிட்டு - அதன் தமிழ்ப் பிழிவாகத் திரட்டப்பட்டுள்ள ‘’ஏ கூன் கே பியாஸ் பாத் சுனோ..." உருதுக் கவிதையின் செய்தி இதோ: 

இரத்த தாகம் கொண்டலையும் கொடியவர்களே 

இதைக் கேளுங்கள்... 

எங்களுக்கு,

அடக்குமுறை, கொடுமைகள்  

அனைத்தும் வரினும் சரிதான், 

ஏற்போம்; 

உரிமைகளுக்கான போராட்டங்களில் 

உயிரல்ல பெரிதெமக்கு,

கொடுமைகளுக்கு மாற்றாக

எங்கள் 

அன்பையே மாறாது அளிப்போம்... 

விடாது தொடருவோம்.

எங்கள் 

பாதைகளனைத்திலும் 

நீங்கள்

அஸ்தமனச் சூரியனையே அமர்த்துங்கள்;

நாங்கள் 

உதயச் சுடரை ஏந்தித் தொடர்வோம்;

எங்கள் 

அன்புக்குரியவர்களின் உயிரீந்துதான் 

உங்கள் 

சிம்மாசனங்களை ஆட்டமுடியுமென்றால் 

கடவுள் மீது ஆணையாக, 

இதைக் கேளுங்கள்...

இதழ்மலரச் சிரித்துக்கொண்டே

நாங்கள் 

எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்வோம்.

இரத்த தாகம் கொண்டலையும் கொடியவர்களே 

இதைக் கேளுங்கள்...

பொறுமையில் நாங்கள் பலம்பெறுவோம், 

வற்புறுத்தலில் நீங்கள் எதைக் காண்பீர்?

உங்கள்

தற்போதைய புகழ்.. 

உங்கள் 

மலர்த் தோட்டங்கள்... 

எல்லாம் ஒரு சிறுகணம் தான்.

இரண்டு மூன்று ஆண்டுகள் 

இருக்கலாம் பசந்து;

சூடம்போல் கரைந்து போகும்,விரைந்து.

பின், கல்லறையில் (தான்) கிடைக்கும் 

தனிமை,

உங்கள் தோட்டங்கள்... பாழாகும் 

தானாக, 

வேட்டையாடுபவர்களுக்கு 

இறுதியில் ஏற்படுவதோ

அவமானந்தான்... அவமானந்தான்..

கொடுமைகளுக்குப் பதிலாக

மாறாமல் நாங்கள் அன்பையே அளிப்போம், 

தொடருவோம்.

(இப்பிழிவு, உச்ச நீதிமன்றம் தற்போதைய வழக்கு விசாரணைகளின்போது இக்கவிதை குறித்து வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களுடன் இசைவாக உள்ளதைக் குறிப்பிட்டுரைக்கலாம்.) 

மாநிலங்களவையில் இம்ரான் பிரதாப்கரி

கவிஞர் - மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் தன்மீது குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள சிட்டி ஏ-டிவிஷன் காவல் நிலையத்தில் 2025 ஜனவரி3 ஆம் தேதியிட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) எண்.11202008250014 / 2025 பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்தவுடன், ‘வழுவா நீதி’ வழங்கப்படும் என அசையா நம்பிக்கையுடன் அணுகினார் குஜராத் உயர்நீதிமன்றத்தை. அமைதி பேசும், அன்பின் செய்தியை விதைக்கும்  கவிதையை, மத உணர்வுகளைத் தூண்டுவதாக அபாண்டமாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுத் - தன்மீதும் பிறந்தநாள் விழா நாயகர் அல்தாஃப் ஜி காஃபி மற்றும் சஞ்சரி கல்வி அறக்கட்டளைத் தொண்டு நிறுவனம் மீதும் -  பதிவு செய்திருக்கும் நியாயமற்ற வழக்கை / எஃப்.ஐ.ஆர்-ஐ இரத்து செய்யக் கோரிக்கையுடன் வழக்குரைஞர் ஐ.எச்.சையத் மூலம் மனுச் செய்தார். 

மேலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த விவகாரம் தீர்க்கப்படும் வரை சட்ட நடைமுறைகளுக்குத் தடை விதிக்கவும், தனக்கெதிராக எந்தவொரு எதிர்மறையான நடவடிக்கையும் எடுக்காமல் புகாரைத் தள்ளுபடி செய்யவும் மனுதாரர் இம்ரான் கோரியிருந்தார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பிறந்தநாள், திருமண விழா விடியோவின் பின்னணியில் சேர்க்கப்பட்டிருந்த கவிதை அன்பு, காதல், அமைதி குறித்த கவிதை என்றும்  இம்ரான்  கூறியிருந்தார். 

இந்த கவிதை எங்கிருந்து எடுக்கப்பட்டது? யார் எழுதியது? மனுதாரரே எழுதினாரா? என்பதையெல்லாம் ஒரு பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

நீதிபதி விடுத்த வினாச்சரங்களுக்கு விடைபகரும் வண்ணம், கவிஞர் இம்ரான் பிரதாப்கரி, ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் அவர், “ தான் கவிதையின் ஆசிரியர் அல்ல என்றும், உண்மையில் அதை எழுதியவர் யார் என்பதை "உறுதியாகக் கண்டறிய" முடியவில்லை என்றும் கூறினார்.

 "ChatGPT & பொது டொமைன் கருத்துக்கள் மூலம் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆதாரங்கள் உட்பட கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில், இந்த கவிதை ஃபைஸ் அகமது ஃபைஸ் அல்லது ஹபீப் ஜலிப் (கவிதைதான் குற்றம்-10) ஆகியோரால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது" என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். பிரமாணப் பத்திரத்துடன் ChatGPT அரட்டையின் ஸ்கிரீன் ஷாட்களையும் இணைத்து வழங்கினார். 

இதையும் படிக்க | விந்தையான கைது... கவிஞர் சோஹெல் ஹசன் காலிப்! கவிதைதான் குற்றம் - 18

மத உணர்வுகளை, வெறுப்பை, வன்முறை வழியைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் “இந்தக் கவிதை அடிப்படையாகப் பேசுவது ‘இன்னா செய்தார்க்கும் இனிதே அளிக்கும் வரையற்ற அன்பை,  ‘உயிரழி நிலை’யிலும் பிறழா அகிம்சையை’; இவையன்றி குற்றச்சாட்டில் புனையப்பட்டுள்ள கூறப்பட்டுள்ள எதையும் இக்கவிதையில் வாசிக்க இடமேயில்லை”  என்று மனுதாரர்  விளக்கமாக எடுத்துரைத்திருந்தார் பிரமாணப் பத்திரத்தில். கவிதையின் அசல் நகலும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

(இந்த இடத்திலிருந்து, இந்த வழக்கின் அடிப்படையே  ஒரு புதிய திசையில் திரும்புவதைக் கவனித்து வருகிறீர்களா?)

இந்தக் கவிதையை சமூக ஊடகங்களில் வெளியிடுவது குற்றம் அல்ல என்றும் மனுதாரர் கூறினார். கவிதையை வெறுமனே வாசிப்பது, பரப்புவது எந்தவகையிலும்  குற்றமல்ல என்று இம்ரானின் வழக்குரைஞர் சையத் நீதிமன்றத்தில் ஆணித்தரமாக வாதிட்டார். 

எஃப்.ஐ.ஆரை ஆதரித்து நின்ற அரசு வழக்குரைஞர்,  "கவிதையின் வார்த்தைகள் அரசின் சிம்மாசனத்திற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய ஆத்திரத்தைத் தெளிவாகக் கொட்டுகின்றன. வன்முறைக்கான அழைப்பு அங்கே பொதிந்திருக்கிறது. அதுவே முதற்காட்சியிலேயே (prima facie) ஒரு குற்றவழக்குக்கான அடிப்படை உருவாகியுள்ளது” என்று வாதாடினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்குக் காவல் நிலையத்திலிருந்து மூன்று நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு இருந்தும் மனுதாரர் ஆஜராகவில்லை; விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அரசுத் தரப்பு சமர்ப்பித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்தீப் என் பட் ”காவல் நிலையத்தில் புகார் அளித்த பின்னர், ஜனவரி 11 ஆம் தேதி போலீசில் ஆஜராகுமாறு மனுதாரருக்கு ஜனவரி 4 ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. விசாரணை அதன் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதன்மை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்தின் செயல்முறையை துஷ்பிரயோகம் செய்ய முடியாது. மனுதாரர் தனக்கு ஆதரவாக சமர்ப்பித்த தீர்ப்புகளின் உண்மைகள் தற்போதைய வழக்கிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. மனுதாரரால் கவிதையின் மூலம் / தோற்றத்தைக் கூட விளக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.

ஒரேநாள் விசாரணையில் (விரைவு நீதி!) இம்ரான் பிரதாப்கரிக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய - குஜராத் உயர் நீதிமன்றம், SCRA(Q) எண் 551/2025 - இன் மீது  17-01-2025 தேதியிட்டு வழங்கிய  இறுதித் தீர்ப்பு மற்றும் உத்தரவின் மூலம்- மறுத்துவிட்டது. 

நீதிபதி தனது உத்தரவில், “விடியோவின் பின்னணியில் ஓடுகிற, "ஏ கூன் கே பியாஸ் பாத் சுனோ..." கவிதையின் தொனியைப் பார்த்தால், அது நிச்சயமாக சிம்மாசனத்தைப் பற்றி ஏதோ ஒன்றை வலுவாகக் குறிப்பிடுகிறது. இந்தப் பதிவுக்கு மற்றவர்கள் அளித்திருக்கும் பதில்களையும் காணும்போது, சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலேயே இந்த விடியோ/ கவிதை பதிவிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த நாட்டின் குடிமக்கள் வகுப்புவாதப்போக்கில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்குமாறு  நடந்து கொள்ளக்கூடாது” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

”நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மனுதாரர், அப்பதவியின் விளைவுகள், பொறுப்புகள் குறித்து மேலும் தெரிந்து கொண்டு, இன்னும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் நீதிபதி சந்தீப் என் பட்கூறியுள்ளார். 

குஜராத் உயர்நீதிமன்றம் அவருக்கு நிவாரணம் வழங்க மறுத்துவிட்ட நிலையில் ( SCRA(Q) எண் 551/2025, நாள் 17-01-2025) அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

உச்சநீதிமன்றம் செல்லுவதற்கு முன்பு நாம் கவிஞர் இம்ரான் பிரதாப்கரி குறித்து சிறிது அறிந்து கொண்டு செல்வோமே...

தற்போது இந்திய அரசியலிலும் உருதுக் கவிதைப் பரப்பிலும் பேரலைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இனிய தோற்றத்து இளம்புயல், உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் ஆகஸ்ட்6, 1987-இல் பிறந்தவர். அவரது தந்தையார் முகமது இலியாஸ் கான்  ஒரு யுனானி மருத்துவர்; தாய் இல்லத்தரசி, உள்ளூரில் சமூக சேவைகள் செய்து வந்தவர். இம்ரானுக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர்: முகமது இம்ரான்கான்.  தனது சொந்த ஊரான பிரதாப்கருடன் உள்ள  வலுவான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் இம்ரான் பிரதாப்கரி (Imran Pratapgarhi) என மாற்றிக்கொண்டார்.

சிறு வயதிலிருந்தே மொழி, புத்தகங்களின் மீது இம்ரானுக்கு நேசம் வளர்ந்து வந்ததை அவரது பெற்றோர்கள் கவனித்து வந்துள்ளனர். தனது ஆரம்பப்பள்ளி ஆண்டுகளிலேயே இந்த ‘பிரதாப்கர் ஞானசம்பந்தன்’ சொந்தமாக இந்தி ரைம்ஸ் எழுதத் தொடங்கிவிட்டாராம். அவரது கவிதை ஊற்று அப்போதே கண்திறந்திருக்கிறது. மகனின் மொழி  ஆர்வத்தை வளர்க்கும் வகையில், இம்ரானது விருப்பப்படியே, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் அவரை இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெறச் செய்தனர்.

கல்லூரிக் காலத்தில் இம்ரான், சொந்த மாநிலத்திலும் வெளி இடங்களிலும் நடைபெறும் கவி சம்மேளனங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு, தனது தோற்றம், குரல் வளம் சொல்லாளுமை, மேடையாட்சி முதலிய தன்திறன்களால் பார்வையாளர்களைக்  கவர்ந்திழுக்கும் வல்லமைமையை வளர்த்து வெளிப்படுத்தினார்.

2008 ஆம் ஆண்டில் பாரம்பரிய உருது கவிதை சிம்போசியமான முஷைராஸில் பங்கேற்க இம்ரான் முடிவு செய்தபோது கவிதை உலகில் அவரது முதல் முன்னேற்றமான நுழைவாக அது அமைந்தது. அதன் பிறகு கவிமேடைகள் யாவும் - உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் – அவர் கைவசம், கவிதை வசம்! அவரது வழியெங்கும் புகழ், பணம் பரிசுகள்! வளர்ந்து வரும் இளங் கவிஞரிலிருந்து, வேறொரு மாநிலத்திலிருந்து 35 வயதில், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு (2022) வந்ததும் இம்ரானின் வளர் திறமை, வற்றா ஆர்வம் போன்ற உரிய அர்ப்பணிப்பு ஆகியவைகளே காரணமெனலாம். 

ராகுல் காந்தி - இம்ரான் இடையே 2018 இல் நிகழ்ந்த ஒரு சாதாரணசந்திப்பு குறிப்பிடத்தக்க அரசியல் பின்புலம் ஏதுமிலாத இம்ரானை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பியில், முக்கியமான தொகுதியான முஷாபர்பூர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியது. முதல் அரசியல் களத் தேர்தல் இம்ரானுக்கு வெற்றியை வழங்கவில்லை. தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், இம்ரானின் தேர்தல் பரப்புரைகள், மக்களின் ஊடே சென்று அவர்களை இயல்பாக, எளிதாக அவர் அணுகும் முறைகள் பலதரப்புக் கவனத்தையும் ஈர்த்தன.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியுடன் இம்ரான் பிரதாப்கரி

அரசியல் புதுமுகம், கவிமுகம், இம்ரான் பிரதாப்காரியின் அர்ப்பணிப்பை, விடாமுயற்சியை அங்கீகரிக்கும் அடையாளமாக 3ஜூன்2021-இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) சிறுபான்மை துறையின் தலைவராக இம்ரான் நியமிக்கப்பட்டார்.  சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதில் உள்ள ஆற்றல், தீர்வுகளுக்காக உழைக்கும் அவரது ஈடுபாடு ஆகியவை சிறுபான்மை மக்களிடையே நல்வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

அரசியல் ஏணியில் தொடர்ந்த ஏறுமுகத்தில்  ஜூன் 2022 இல், அவர் மகாராஷ்டிராவிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரது அரசியல் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல். தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் (5-7-2022) முதல் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை, விழைவுகளை,  பிரச்சினைகளை மாநிலங்களவையில் 94% வருகைப்பதிவுடன், வலுவாக எடுத்துரைக்கும் குரலாகச் செயல்பட்டு வருகிறார். கவிதைகள் விரவிய அவரது உரைகள் அவையிலும் வெளியிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

வாங்க... உச்சநீதிமன்றம் சென்று கவனிக்கலாம்.

அகமதாபாத் ஜாம்நகர் காவல் நிலையத்தில் தன்மீது (மற்ற இருவருடன் சேர்த்து) பதிவு செய்யப்பட்டிருக்கும் 3-1-2025 நாளிட்ட எஃப்.ஐ.ஆரை அடியோடு இரத்து செய்ய வேண்டி முன்வைத்த இம்ரானின் கோரிக்கையை, குஜராத் உயர்நீதிமன்றம், நீதிபதி சந்தீப் என் பட்வழங்கிய 17-1-2025 நாளிட்ட இறுதி உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்துவிட்டதை அறிவோம். 

ஆகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்கு விஸ்தாரமாக வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளின் ஆதாரத்தில், குறிப்பாக கருத்துக்கூறும் உரிமைகளின் தளம் நின்று, தக்க நிவாரணம் வேண்டி உச்சநீதிமன்றத்தில் இம்ரான் பிரதாப்கரி மேல்முறையீடு செய்ய சிறப்பு அனுமதிகோரிய மனு 21-1-2025 இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்(கள்) சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபில் எடுத்துரைத்த வாதத்தை கேட்டு, மனுவை ஆராய்ந்த மாண்புமிகு நீதிபதி அபய் எஸ்.ஓகா, மாண்புமிகு திரு நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வு, கீழ்காண்பவை அடங்கிய ஆணையைப் பிறப்பித்தது.

  1. இம்ரான் (மற்ற இருவர்) தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டுக்கான சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

  2. எதிர் மனுதாரர்களுக்கு - குஜராத் அரசு மற்றும் தொர்புடையவர்கள்-  10 பிப்ரவரி, 2025-க்குள்  மனுமீது பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பலாம். 

  3. இதற்கிடையில், குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள சிட்டி ஏ-டிவிஷன் காவல் நிலையத்தில் 2025 ஜனவரி 3 ஆம் தேதியிட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) எண்.11202008250014 / 2025 இன் அடிப்படையில் எந்த வகையிலும் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படாது.

(Case: Imran Pratapgarhi v. State of Gujarat, Case Number: SCRA(Q) No. 551/2025)

மாண்புமிகு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வு, 21-1-2025 நாளிட்ட ஆணையில் மூன்றாவதாகக் குறிப்பிட்டுள்ள நிவாரணம்  தற்காலிகமானது என்றாலும், முக்கியமானது. 

இதன்மூலம், சமூகஊடக வலைத்தளத்தில் இம்ரான் வெளியிட்ட விடியோவில் பின்னணியில் ஒலிக்கும்‘’ஏ கூன் கே பியாஸ் பாத் சுனோ..." உருதுக் கவிதையின் உள்ளடக்கத்தைக் குஜராத் காவல் நிலையத்தில் புகாரளித்தவர், புகார் பதிவு செய்த காவல் துறை புரிந்துகொண்டதன் அடிப்படையில்;  புகாரின் முதற்காட்சியிலேயே (prima facie) குற்ற முகாந்திரம்  தென்படுகிறது எனக் கண்டறிந்த குஜராத் உயர்நீதிமன்ற ஆணை ஆகியவைகள் மேற்கொள்ள விரும்பிய, மேற்கொள்ள முனையும் அனைத்து நடவடிக்கைகள் மீதும் முதல் ஆணி அடிக்கப்பட்டுவிட்டது என்பதே இந்த நிவாரணத்தின் முக்கியத்துவமாகும்.

இந்த வழக்கு ஐந்து நாள்களுக்கு முன் (மார்ச்3-இல்) உச்சநீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்தமுறை விசாரணையின்போது மனுதாரரின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அரசுசார்பு/எதிர் தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இடையே சட்டம், இலக்கிய விவாதங்களைக் கொண்ட நகைச்சுவையான பரிமாற்றங்களும் நிகழ்ந்தன. 

நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா , உஜ்ஜல் புயான் அமர்வு இந்த வழக்கைக் காவல்துறையினர் எவ்வாறு மேம்போக்காகக் கையாண்டுள்ளனர் என்பது,  நம்நாட்டில் பேச்சு, கருத்து சுதந்திரத்திற்குரிய மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டவேண்டியதாக ஆக்கியுள்ளதெனக் கருத்துத் தெரிவித்தது.

குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உண்மையில் மனுதாரர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த கவிதை ஹபீப் ஜலிப் அல்லது ஃபைஸ் அகமது ஃபைஸ் போன்ற பிரபல உருதுக் கவிஞர்களின் படைப்பாக இருக்க வாய்ப்புள்ள தகுநிலையில்  உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். மேலும், "இதன் நிலை ஒருபோதும் ஃபைஸ் அல்லது ஹபீப் ஜலிப் ஆக இருக்க முடியாது" என்றும் (விடியோவிலுள்ள) கவிதையை ஒரு "சதக் சாப்" (அற்பம்/ சாதாரணமான/ பாதசாரி) கவிதை என்று விமர்சித்தார். 

சிறந்த கவிஞருமான வழக்குரைஞர் கபில் சிபல் நகைச்சுவையாக "என் கவிதைகளும்கூட ’சதக் சாப்’தான்” என்று பதிலளித்தார். நீதிமன்ற விவாத வெப்பத்தைத் தணித்தன, கபில் சிபல் பற்றி துஷார் மேத்தாவின் புகழ்ச்சியும், பம்பாய் உயர்நீதி மன்றத்திலிருந்து கர்நாடகத் தலைமை நீதிபதியாகிக் கடந்த மூன்றாண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் மே 24-இல் பணிநிறைவு பெற இருக்கும் நீதிபதி அபய் ஶ்ரீனிவாஸ் ஓகா அவர்களது குறுக்கீடும்.

அரசுத்தரப்பில் நின்று கபில்சிபலுக்கு எதிராக வழக்காடும் துஷார் மேத்தா, கபில் சிபலின் கவிதைகளைப் புகழ்ந்துரைத்தார். நீதிபதி ஓகாவும் நகைச்சுவையான விவாதத்தில் கலந்து கொண்டார்.

மூத்த வழக்குரைஞர் கபில்சிலை நோக்கி, “ உங்கள் கவிதைகளை சதக் சாப் என்று வகைப்படுத்த வேண்டாம். ஏனென்றால் மே மாத இறுதியில் நீங்கள் எனக்காக ஒரு கவிதை எழுத வேண்டியதிருக்கும். அதனால் தயவு செஞ்சு அப்படி சொல்லாதீங்க" என்றார்.

இந்த நகைச்சுவை கடந்து, சீரியஸாகி, பிரதாப்கரி பகிர்ந்த கவிதை குறித்த தனது விமர்சனத்தைத் தொடர்ந்த துஷார் மேத்தா, "இது ஒரு கவிதை என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஏன்? ஷேர் கபி அச்சா யா புரா நஹி ஹோதா; யா ஹோத்தா ஹை யா நஹி ஹோடா" என்றார்.

நீதிபதி ஓகா மகிழ்ச்சியுடன், "இப்போது நீங்கள் அவருடன் போட்டியிட விரும்புகிறீர்களா? கவிதை எழுதுவதில்?"  எனவும், இம்முறை கபில் சிபல், துஷார் மேத்தாவைத் தூக்கிப் புகழ்ந்தார். ”மேத்தா முயற்சி செய்யவேண்டியதில்லை; கவிதை அறிவுச் செல்வம் அவரிடம் ஏற்கனவே நிறைந்திருக்கிறது" என்றார்.

நீதிபதி ஒகா  “அரசு வழக்குரைஞர் மேத்தாவுக்குக் கவிதை எழுதுவதற்குப் போதிய நேரம் இருக்காது” என்று சிரித்தார்.

மேத்தாவும் வேடிக்கையாகப் பதிலளித்தார். "இல்லை, இல்லை எனக்கு நேரமாகிறது. கவிஞனாக ஆவதற்கு காதலில் விழ வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் அவ்வாறு விழவில்லையே” என்று கைவிரித்தார். 

நகைச்சுவைக் குளிர்ச்சியினூடே இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓகா ஆணியடித்தாற்போலக் குறிப்பிட்டுள்ளது கவனிக்க வேண்டியதாகிறது. இது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பல்ல; தீர்ப்பின் திசையைக் காட்டும் கைகாட்டி.

"இந்த வழக்கின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு காவல்துறையினர் சில உணர்திறனைக் (Sensitivity to Poetry and the Constitution) கொண்டிருக்க வேண்டும். இதுதான் பிரச்சினை. அவர்கள் குறைந்தபட்சம் அரசியலமைப்பின் பிரிவுகளையாவது படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது குறைந்தபட்சம் பேச்சு சுதந்திரம், கருத்துக்கூற மக்களுக்குள்ள சுதந்திரம் முதலியவற்றை காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது படைப்பாற்றல் மீது யாருக்கும் மரியாதை இல்லை. நீங்கள் அக்கவிதையைத் தெளிவாகப் படித்தால், ‘நீங்கள் அநீதியை அனுபவித்தாலும், அதை அன்புடன் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று கவிதை கூறுகிறது; ‘மக்கள் இறந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என்கிறது. இந்தக் கவிதை எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. யாராவது வன்முறையில் ஈடுபட்டாலும் நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம் என்பதைத்தானே  மறைமுகமாக இக்கவிதை சொல்கிறது. இதுதான் கவிதை சொல்லும் செய்தி. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்று வரும்போது, வேறொரு நிகழ்ச்சி நிரல்  (Agenda) இருக்க முடியாது. அதை நாம் நிலைநிறுத்த வேண்டும். குறைந்தபட்சம் கவிதையின் பொருளையாவது புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நமது கவலை. அதுதான் எங்கள் கவலை" என்றார்.

எஃப்.ஐ.ஆரை ரத்து செய்வதற்கான பிரதாப்காரியின் மனுவை நிராகரித்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் முடிவையும் பெஞ்ச் விமர்சித்தது.

அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கூறியதாவது, "கவிதையில் உங்கள் மனதைச் செலுத்துங்கள்; இறுதியில், படைப்பாற்றலும் முக்கியமானது என்பதை உணருங்கள்” என்றார் நீதிபதி ஓகா.


இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்த நீதிமன்றம் முன்பு வழங்கிய இடைக்கால நிவாரணம் தொடர்ந்து அமலில் இருக்கும்.

மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப்கரிக்கு சமூக ஊடகங்களில் 16 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கிளிப் ஒரே நாளில் 1.77 லட்சம் பார்வைகளைப் பெற்றது.

இம்ரானின் "ஏ கூன் கே பியாஸ் பாத் சுனோ" என்ற கவிதையைக் கொண்ட சமூக ஊடக இடுகை  இணையப்பெரும் பரப்பில் இன்றும் இனிதுலா நடத்திவருகிறது; நீக்கப்படவில்லை.

**

பி.கு. கட்டுரையில் “இந்த இடத்திலிருந்து, இந்த வழக்கின் அடிப்படையே  ஒரு புதிய திசையில் திரும்புவதைக் கவனித்து வருகிறீர்களா?” என்று கேட்டிருந்தேன். கவனித்தீர்களா?

ஜாம்நகர் எப்.ஐ.ஆர் (நாள் 3-1-2025) கவிதை எழுதிய இம்ரான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஏற்றியது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கவிதை தன்னுடையதல்ல; ஒருவேளை அது ஃபைஸ் அகமது ஃபைஸ் அல்லது ஹபீப் ஜலிப் கவிதையாக இருக்கலாம் என்றும், அதுவும் தனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை என்றார்

அப்படியானால், கவிதையை வெளியிட்ட குற்றம் மட்டுமே அவர் மீது சொல்லப்படலாம். அந்தக் கவிதை யாருடையதாக இருந்தாலும் நம்நாட்டில் தடை செய்யப்பட்ட கவிதையல்ல. அப்படியானால், வெளியிட்டதும் குற்றமாக வாய்ப்பில்லை. 

குஜராத் நீதிமன்றம் ஒரே நாள் விசாரணையில் அளித்த தீர்ப்பில் (17-1-2025) இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளவில்லை. கவிதை யாருடையது என்பதை மனுதாரர் தெரிவிக்க முடியவில்லை என்றே குறை கண்டுள்ளது. 

அதற்கடுத்து உச்சநீதிமன்றத்திலும் மனுதாரர் கூறியுள்ளபடி அக்கவிதை ஃபைஸ் அகமது ஃபைஸ் அல்லது ஹபீப் ஜலிப் கவிதையாக இருக்கமுடியாதே என்ற கோணத்தில் துஷார் மேத்தா வாதிட்டதைக் கண்டோம்.

கவிதை இம்ரான் எழுதியதில்லை என்றால் அவர்மீது என்ன குற்றம்?

தடைசெய்யப்படாத ஒரு கவிதையை அது யார் எழுதியதாக இருந்தாலும் அதனைச் சமூக ஊடகத்தில் வெளியிட்டதில் என்ன குற்றம்?

உச்சநீதிமன்றம் வழங்கவிருக்கும் இறுதித் தீர்ப்பில் இவ்வினாக்களுக்கு விடைகள் கிடைக்குமா? பார்க்கலாம்.

**

[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்] (wcciprojectdirector.hre@gmail.com)

சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?

பாதிக்கப்பட்ட பெண்ணை மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைச் சிறையிலிருந்து பிணையில் விடுதலை செய்திருக்கிறது அலாகாபாத் உயர் நீதிம... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?

ஒரு நாட்டின் மூன்றிலொரு பகுதியைச் சேர்ந்த மக்கள் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் அரசமைப்பின் செயல்பாடுகள் முற்றில... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும்

_ இயற்கைப் பேரழிவுகளால் நேரிட்ட உயிர், உடைமை இழப்புகள் எவ்வளவு?தரவுகள் எதுவும் இல்லை. (வயநாடு நிலச்சரிவு பற்றிய கேள்விக்கான பதிலில்) பேரழிவுகளின் உயிரிழப்புகள், காயங்கள், குறைபாடுகள் பற்றி மத்திய அரசு... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... கோடிகளால் கட்டமைக்கப்படும் பிம்பங்கள்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள திரைப்பட நடிகர் விஜய்யைக் கடந்த சில நாள்களுக்கு முன் ‘பொலிடிகல் ஸ்ட்ரேடஜிஸ்ட்’ [அரசியல் உத்தியாளர், உத்தி வகுப்பாளர், தேர்தல் வியூக வகுப்... மேலும் பார்க்க

உங்கள் காதலைக் கொண்டாட 10 சிறந்த மலைப்பிரதேசங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கினாலே காதலர்களின் அன்பான அலப்பறைகளும் சமூக ஊடகங்களில் அதுகுறித்து பதிவிடுவதும் தொடங்கிவிடும். பிப்ரவரி இரண்டாம் வாரம் முழுவதும் ரோஸ் டே, பிராமிஸ் டே, கிஸ் டே என்று... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!

கைகள், கால்களில் விலங்குகள், இரண்டையும் இணைத்து இடுப்பில் பூட்டப்பட்டு இழுத்துச் செல்லும்படியான சங்கிலி!சுமார் 40 மணி நேர விமானப் பயணத்தில் எங்கேயும் இவை அகற்றப்படவில்லை. கழிப்பறைகளுக்குச் செல்லும்போத... மேலும் பார்க்க