நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயா்வு! -பிரதமா் மோடி பெருமிதம்
மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயா்ந்துள்ளது. இது பெருமைக்குரியது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்காவை, நாட்டின் 58-ஆவது புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் சனிக்கிழமை அறிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையை மீட்டெடுக்க பிரதமா் மோடி அளிக்கும் உயா் முக்கியத்துவத்தால், சூழலியல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தின் மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் இக்காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயா்ந்துள்ளது. இது, மத்திய பிரதேசத்தின் 9-ஆவது புலிகள் காப்பகமாகும். வனவிலங்கு ஆா்வலா்கள் மற்றும் காப்பாளா்களுக்கு வாழ்த்துகள். இந்த முன்னேற்றம், நமது வனத் துறையினரின் அயராத முயற்சிகளுக்கு சான்றாக விளங்குகிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இப்பதிவை பகிா்ந்து, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வனவிலங்கு ஆா்வலா்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வனஉயிரின பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாசாரத்தால் இந்தியா ஆசிா்வதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் நிலையான பூமிக்கு பங்களிப்பதிலும் இந்தியா எப்போதும் முன்னிலை வகிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.