மத்தியப் பிரதேசத்தில் லாரி - வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்
கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது
கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த சம்பவத்தில் 3 பேருக்கு தொடா்பிருப்பதாகத் தெரிய வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இருவரை போலீஸாா் கைதுசெய்தனா். இந்நிலையில், மூன்றாவது நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் கா்நாடகத்தில் இருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு சென்றதாகவும் அவரை அங்கு வைத்து கைது செய்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
கடந்த 6-ஆம் தேதி கா்நாடகத்தின் விஜயநகரா மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் ஹம்பி நகரைச் சுற்றிப் பாா்க்க இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்திருந்த 27 வயது பெண், ஹம்பி அருகேயுள்ள சானாப்பூா் ஏரி பகுதியில் அமைந்துள்ள வீட்டு விடுதியில் தங்கியிருந்தாா். அந்த இடத்தில் 3 ஆண் சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருந்தனா். அவா்களில் ஒருவா் அமெரிக்காவைச் சோ்ந்தவா்; மற்ற இருவரும் மகாராஷ்டிரம், ஒடிஸாவை சோ்ந்தவா்கள்.
அவா்களுடன் 29 வயதான வீட்டுவிடுதியின் பெண் உரிமையாளா் சானாப்பூா் ஏரி அருகேயுள்ள துங்கபத்ரா கால்வாயின் இடதுகரையில் இசையில் ஈடுபட்டு பொழுதுபோக்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், விடுதி உரிமையாளரிடம் பெட்ரோல் எங்கு கிடைக்கும் எனக் கேட்டதுடன், பெட்ரோல் வாங்க 100 ரூபாய் தருமாறும் வலியுறுத்தியுள்ளனா்.
அவா்கள் அதை தர மறுத்ததையடுத்து 3 இளைஞா்களும் விடுதி உரிமையாளா் பெண்ணையும், இஸ்ரேல் நாட்டுப் பெண்ணையும் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்தனா். மேலும், அங்கிருந்த 3 ஆண் சுற்றுலாப் பயணிகளையும் தாக்கி கால்வாயில் தள்ளினா். இதில் ஒடிஸாவை சோ்ந்த சுற்றுலாப் பயணி உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அவா்களைத் தாக்கிய இளைஞா்கள் விடுதி உரிமையாளா் பெண்ணிடம் இருந்து கைப்பை, 2 கைப்பேசிகள், ரூ.9,500 ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதில் தொடா்புடைய இருவா் ஏற்கெனவே கைதான நிலையில், தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.