HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ் நாடார் - இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்...
பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக அரசியல் கட்சிகள் ஏற்கெனவே களப்பணிகளைத் தொடங்கிவிட்டன. முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் அணிக்கும் தோ்தலில் கடும் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் பிகாரின் கதிஹாா் தொகுதி எம்.பி. தாரிக் அன்வா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மதத் தலைவா்கள் நாட்டில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம். அதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவா்கள் தோ்தல் நடக்கும் மாநிலங்களில் மட்டும் அடிக்கடி பயணம் மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்துகிறது.
ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஆன்மிக தலைவா்களை பாஜக கூட்டணி தங்கள் தோ்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது. தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அவா்களை பாஜக திட்டமிட்டு அனுப்பி வைக்கிறது.
இப்போதும் கூட பிகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் ஆச்சாா்யா தீரேந்திர சாஸ்திரி பயணம் மேற்கொண்டுள்ளாா் என்றாா்.
தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ள 29 வயது இளம் துறவியான ஆச்சாா்யா தீரேந்திர சாஸ்திரி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போது, ‘இந்தியாவில் ஹிந்து ராஷ்டிரம்’ அமைய வேண்டும் என்று பேசினாா். இதனை முன்வைத்து பாஜகவை எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.