Rohit: லாய்ட், பாண்டிங், தோனி... எலைட் லிஸ்டில் ரோஹித் - ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஹிட்மேன்
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி நேற்று நியூசிலாந்தை வீழ்த்தி, 2000-ம் ஆண்டில் இதேபோன்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியைச் சரிகட்டியது.
இந்தத் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியபோதே, அதிகமுறை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற சாதனைப் படைத்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபி வென்ற ஒரே அணி என்ற மற்றுமொரு சாதனை படைத்திருக்கிறது. இதில், 2002-ல் மட்டும் மழையால் இறுதிப்போட்டி ரத்தானதால் இந்தியாவும், இலங்கையும் கோப்பையை பகிர்ந்துகொண்டன. அணியாக இந்தியா இத்தகைய சாதனைகள் படைத்திருக்க, தனிநபராக கேப்டனாக ரோஹித் சர்மாவும் இந்த வெற்றியின் மூலம் சாதனைகள் குவித்திருக்கிறார்.

ஐ.சி.சி பைனலில் ஆட்ட நாயகன் விருது பெற்ற கேப்டன்கள் எலைட் லிஸ்டில் ரோஹித்!
நேற்றைய இறுதிப்போட்டியில் 83 பந்துகளில் அதிரடியாக 76 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா, ஆட்ட நாயகன் விருது வென்றார். இதன் மூலம், 2011-க்குப் பிறகு ஐ.சி.சி தொடர் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற முதல் கேப்டன் ஆனார் ரோஹித். மேலும், இந்த எலைட் லிஸ்டில் ரோஹித்தை சேர்த்து மொத்தமாகவே 4 கேப்டன்கள் தான் இருக்கிறார்கள்.

கிளைவ் லாயிட் - வெஸ்ட் இண்டீஸ் - 1975 ஒருநாள் உலகக் கோப்பை
ரிக்கி பாண்டிங் - ஆஸ்திரேலியா - 2003 ஒருநாள் உலகக் கோப்பை
தோனி - இந்தியா - 2011 ஒருநாள் உலகக் கோப்பை
ரோஹித் சர்மா - இந்தியா - 2025 சாம்பியன்ஸ் டிராபி
அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்!
இந்த வெற்றியின் மூலம், அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில், 2007, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2013, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 4 ஐ.சி.சி கோப்பைகளுடன் ரோஹித் முதலிடம் பிடித்திருக்கிறார். இவரோடு, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2013, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 4 ஐ.சி.சி கோப்பைகளுடன் கோலி முதலிடத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 3 ஐ.சி.சி கோப்பைகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜடேஜாவும் மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்ற அணிகளில் இடம் பிடித்து தோனியுடன் இரண்டாமிடத்தைப் பகிர்ந்திருக்கிறார். அதேசமயம், உலக அளவில் அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்றவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்குக்கு (5) அடுத்த இடத்தை 8 ஆஸ்திரேலிய வீரர்களுடன் ரோஹித்தும், கோலியும் பகிர்ந்திருக்கின்றனர்.
இவை தவிர, தொடர்ச்சியாக நான்கு ஐ.சி.சி தொடர்களின் (2023 WTC, 2023 ODI CWC, 2024 T20 WC, 2015 CT) இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற சாதனையையும் ரோஹித் படைத்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
