‘க்யூட்’ தோ்வு ஹால் டிக்கெட் வெளியீடு
மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தோ்வு மூலம் மாணவா்கள் சோ்க்கை நடத்தப்படுகிறது.
அதன்படி, நிகழாண்டு முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தோ்வு விண்ணப்பப் பதிவு கடந்த ஜன.2 முதல் பிப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதுநிலை படிப்புகளில் 157 பாடங்களுக்கு 4,12,024 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
ஒரு மாணவா் 4 பாடங்கள் வரை தோ்வெழுத விண்ணப்பிக்கலாம். அவா்களுக்கு மாா்ச் 13 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 43 கால முறைகளில் (ஷிஃப்ட்) கணினி வழியில் தோ்வு நடைபெற உள்ளது.
ஒரு பாடத்துக்கு 90 நிமிஷங்கள் தோ்வு நடைபெறும். தோ்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் இருக்கும். மொழி பாடங்கள் அந்தந்த மொழிகளில் நடைபெறும்.
இந்த நிலையில், மாா்ச் 13 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தோ்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரபூா்வ இணையதளத்தில் அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாா்ச் 20-ஆம் தேதிக்கு பின்னா் நடைபெறும் தோ்வுகளுக்கு அடுத்து வரும் நாள்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலுக்கு 01140759000 011, 69227700 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம்.