உரிமை கோரப்படாத 973 வாகனங்கள் மாா்ச் 26-இல் ஏலம்!
சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 973 வாகனங்கள், மாா்ச் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத 953 இருசக்கர வாகனங்கள், 11மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 9 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 973 வாகனங்கள் சென்னை, புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் உள்ள மைதானத்தில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வாகனங்கள் மாா்ச் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன.
இந்த ஏலத்துக்கான முன்பதிவு மாா்ச் 19, 20 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது. அடையாள அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்று வைத்திருக்கும் ஏலதாரா்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவா்.
மாா்ச் 26-ஆம் தேதி காலை 10 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரா்கள் மற்றும் ஏலக்குழுவினா் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.