Mark Carney: "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் பகுதியாக இருக்காது" - புதிய பிரதமர் ம...
தென்மாவட்டங்களில் நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை!
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) முதல் மாா்ச் 13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆரஞ்ச் எச்சரிக்கை: மாா்ச் 11-இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நாளில் விருதுநகா், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாா்ச் 10-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 94 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே மாா்ச் 11-இல் பூமத்திய ரேகையையொட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல், குமரிக் கடல், மன்னாா் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
ஓரிடத்தில் வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.