3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!
சொல்லப் போனால்... திருடனுக்கு சாவியைப் பரிசளிக்கும் புதிய நீதி?
பாதிக்கப்பட்ட பெண்ணை மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைச் சிறையிலிருந்து பிணையில் விடுதலை செய்திருக்கிறது அலாகாபாத் உயர் நீதிமன்றம்!
‘தான் மிகவும் நேர்மையான நபர் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு கவனித்துக்கொள்வதாகவும்’ அளித்த உறுதியையேற்று நீதிமன்றம் கடந்த வாரம் அவரை விடுவித்திருக்கிறது. எனினும், ஏன் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டது என்பது பற்றியோ இந்த முடிவை எடுப்பதற்கு முன் புகார் செய்த பெண்ணிடம் ஆலோசனை செய்யப்பட்டதா என்பது பற்றியோ நீதிமன்ற உத்தரவில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஷிகார் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர், காவலர் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றுவந்துள்ளார். அதே மையத்தில் உடன் பயின்ற பெண்ணிடம் உத்தரப் பிரதேச காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகத் தெரிவித்து பாலியல்ரீதியாக ஏமாற்றிவந்துள்ளார். பெண்ணுடன் பல முறை உறவு வைத்துக்கொண்ட அவர், அந்த விடியோக்களை வெளியிடப் போவதாகத் தெரிவித்து ரூ. 9 லட்சம் வரை பணமும் பறித்துள்ளார் (விடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன).
2024 மே மாதத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் புகார் செய்யப்பட்டது. வல்லுறவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கடந்த செப்டம்பரில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். ஆக்ரா செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவருடைய பிணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பிணையில் விடுதலை பெற்றிருக்கிறார் குற்றம் சாட்டப்பட்ட நபர்.
இவ்வாறு வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, திருமணத்தை நிபந்தனையாக விதித்து அலாகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்வது இதுவொன்றும் முதல் முறையல்ல என்பது குறிப்பிடத் தக்கது.
பதினைந்து வயதுச் சிறுமியுடன் ஏமாற்றி உறவு வைத்துக்கொண்ட ஒருவர், அந்தச் சிறுமி கருவுற்ற நிலையில், பின்னர் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். புகாரின்பேரில் வல்லுறவு, போக்சோ உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது செய்யப்பட்டார் அவர்.
ஆனால், பின்னர், கடந்த 2023 அக்டோபரில் அந்தச் சிறுமியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்; அந்தக் குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் குற்றம் சாட்டப்பட்ட நபர் இதே நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
வழக்கு நடத்திக் குற்றவாளியாகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவரை, பாதிக்கப்பட்ட பெண்ணை மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தற்போது நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு எங்கோவொரு மூலையிலுள்ள ஏதோவொரு கிராமத்திலுள்ள ஆலமரத்தடியில் சொம்பும் கையுமாக அமர்ந்தபடி நாட்டாமை அளித்த தீர்ப்பு அல்ல! இந்திய சட்டங்களின் படியான நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு.
பெண்ணுக்கு எதிராக இழைத்த குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டிய ஒருவரை விடுதலை செய்ததுடன், திருமணத்தின் மூலம் மீண்டும் மீண்டும் அதே தவறிழைக்க நீதிமன்றமே சட்டபூர்வ அனுமதி தருவதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? உள்ளபடியே நமது சட்டம் இதை அனுமதிக்கிறதா?
யாரும் மேல் முறையீடு செய்யாதபட்சத்தில், செய்ய இயலாத நிலையில் உச்ச நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை அனுமதிக்குமா? எதிர்காலத்தில் இதுபோன்ற வல்லுறவு வழக்குகளில், நாடு முழுவதும் இதே பாணியில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றவாளியே திருமணம் செய்துகொள்ள வழிவகுக்கும் தீர்ப்புகள் வழங்கப்பட நேரிடுமா?
ஒருவேளை இந்தப் பாணி நீதிபரிபாலனம் ஏற்கப்பட்டால், விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ, யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் வல்லுறவு கொண்டுவிட்டால், சம்பந்தப்பட்ட ஆணுக்கே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துவைக்கும் நிலையேற்படுமா?
இவ்வாறு திருமணம் செய்துவைக்கப்படும் பெண்களின் எதிர்கால நல்வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதத்தை யாரால் தர முடியும்? குற்றம் சாட்டப்பட்டவரின் விடுதலைக்குப் பின், அல்லது திருமணத்துக்குப் பின் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான பாதுகாப்பையேனும் உறுதி செய்ய இயலுமா?
இந்திய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவலின்படியே (கடைசியாகக் கிடைக்கப்பெறும் அதிகாரபூர்வ புள்ளிவிவரமும் இதுதான்!), 2022 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 31,516 வல்லுறவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; சராசரியாக ஒரு நாளில் 86 வல்லுறவுப் புகார்கள்!
இப்படியாக முன்வந்து செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் விசாரணை நிலையில், நிலுவையில் இருந்த வல்லுறவு வழக்குகளின் எண்ணிக்கை – 1,98,285! இவற்றில் இந்த ஓராண்டில் 18,517 வழக்குகளில்தான் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. மாற்றிச் சொன்னால், வழக்குகளில் 90 சதவிகிதம் விசாரணை நிலையிலேயே தொடருகின்றன. இதே 2022 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டவற்றில் 65.14 சதவிகித வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்!
வல்லுறவு தொடர்பாக ஆவணங்களில் தெரிவிக்கப்படும் அல்லது தெரியவரும் எண்கள் - கணக்குகள் யாவும் மிகச் சிறு பகுதியே என்றால் மிகையில்லை. நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வல்லுறவுச் சம்பவங்களின் உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருக்கும். ஏனெனில், இந்திய சமூகச் சூழலைப் பொருத்தவரை வல்லுறவு தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்ய முன்வருவதே மிகவும் கடினம், அரிதும்கூட.
உள்ளபடியே, தற்போது வல்லுறவு தொடர்பாக ஒரு பெண்ணால் தனியாகவோ, அல்லது குடும்பத்துடனோ சென்று புகார் தரக் கூடிய சூழ்நிலையே இல்லை என்றுதான் வழக்குரைஞர் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். மகளிர் காவல்நிலையம் உள்பட காவல்நிலையங்களில் கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மனநிலை அனேகமாக தற்கொலை பற்றியதாகத்தான் இருக்கும். இவற்றையெல்லாம் தாண்டி, சாதி, மதம், சங்கம், அமைப்பு போன்ற ஏதேனும் பின்புலம் இருந்தால் ஓரளவு எதிர்கொள்ளலாம் (வல்லுறவு தொடர்பான புகார்களில் காவல்துறையினரின் அணுகுமுறை முற்றிலும் மாற வேண்டியது மிகவும் அவசியம்).
இதனாலேயே, காவல்நிலையங்களுக்கோ, நீதிமன்றங்களுக்கோ வரும் புகார்களைவிடவும் பல மடங்கு வல்லுறவுக் குற்றங்கள் புகார் செய்ய வராமலேயே சகித்துக்கொள்ளப்படுகின்றன; கணக்கிலேயே வராமல் போய்விடுகின்றன.
பல்வேறு விதமான சமூக அழுத்தங்கள், குடும்பச் சூழல், குற்றவாளிகளின் பின்னணி தொடர்பான அச்சம், பல்வேறு வகையில் தொடர்ந்து பாதிக்கப்பட நேரிடும் என்ற பயம், வழக்கு விசாரணைகள் நடைபெறக் கூடிய காலம், வழக்குகளுக்கான செலவுகள்... போன்ற எல்லாவற்றையும் தாண்டி, வல்லுறவுப் புகார் கொடுத்த பெண், ஒட்டுமொத்தமாகத் தன்னுடைய எதிர்காலத்தையே பணயம் வைக்க வேண்டிய சமூகச் சூழல்.
இவை மட்டுமின்றி விசாரணைக் காலத்திலும் தொடர்ச்சியாகவும் காவல்துறை, நீதிமன்றங்கள் மட்டுமின்றிக் குடும்பத்தாலும் சுற்றத்தாலும் சமூகத்தாலும் அந்தப் பெண் பார்க்கப்படும் விதம். இவற்றால் இந்தப் பெண்களின் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடும் மன உளைச்சல்.
துணிந்து புகார் செய்தாலும் விசாரணை நீதிமன்றங்களில் தொடங்கி, மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் என அடுத்தடுத்து சென்றால் வழக்கு நடைபெறும் காலமும் அதனால் நேரிடும் அலைச்சலும் அவதியும் வேறு.
நிறைய பண வசதி இருந்து, நன்றாகச் செலவும் செய்ய முடிந்தால் திறமையான வழக்குரைஞர்களை அமர்த்தி நீதிமன்றங்களில் வழக்காடி, சட்டங்களிலுள்ள ஓட்டைகளை அல்லது நுட்பங்களைப் பயன்படுத்தி, குற்றமிழைத்த பலராலும் எளிதில் வெளிவந்துவிட முடியும் – 2022-ல் 65 சதவிகிதம் விடுதலை!
தில்லி திகார் சிறையில் 35 ஆண்டுகள் பணிபுரிந்தவரும் ‘பிளாக் வாரன்ட்: திகார் ஜெயிலரின் வாக்குமூலங்கள்’ நூலின் இணை ஆசிரியருமான சுநீல் குமார் குப்த, மரண தண்டனை பற்றிக் குறிப்பிடும்போது, ஏழை எளியவர்கள் மட்டுமே தூக்கிலிடப்படுகிறார்கள், ஏனெனில், இவர்களால் திறமையான, நல்ல வழக்குரைஞர்களுக்கு செலவழிக்க முடிவதில்லை என்கிறார் – ஆக, செலவழிக்க முடியுமானால் – பணம் இருக்குமானால் எவரொருவராலும் சட்டத்தின் பிடியிலிருந்து, நீதியிலிருந்து தப்பிவர இயலும் என்றாகிறது!
நம் நீதிபரிபாலனத்தில் நடைமுறையில் சில சிக்கல்கள் அல்லது புதிர்கள் இருக்கின்றன. விசாரணை நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் ஒருவர், மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்படுவார். பின்னர் அவரே மாநில உயர் நீதிமன்றத்தால் மறுபடியும் தண்டிக்கப்படுவார். மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவார். இதுவே கொஞ்சம் முன்பின்னாக மாறிமாறியும் நேரிடும். அப்படியானால், உண்மையிலேயே சம்பந்தப்பட்டவர் குற்றவாளியா? இல்லையா? எது நீதி? எங்கே வழங்கப்படுவது நீதி?
இத்தகைய சூழலில் – நாடு முழுவதும் எத்தனையோ விதமான போர்வைகளில், எத்தனையோ பின்புலங்களுடன், எத்தனையோ முகமூடிகளுடன் எண்ணற்ற ஞானசேகரன்கள் அலைந்துகொண்டிருக்கும் நிலையில்தான் - வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றமிழைத்தவரே திருமணம் செய்துகொள்ள வழிவகுத்துத் தீர்ப்பளித்திருக்கிறது அலாகாபாத் உயர் நீதிமன்றம்.
வல்லுறவுக் குற்ற வழக்குகளைப் பொருத்தவரை சட்டத்திலுள்ள விதிகளுக்கு உள்பட்டு, விரைவாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான், பாதிக்கப்பட்ட பெண்களின், சிறுமிகளின், குடும்பங்களின் எதிர்பார்ப்பு. மாறாக, சிறை உள்பட தண்டனைகளுக்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்துவது என்பது ஏற்புடையதாக இருக்க முடியாது (ஒரு நபரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால்?).
வழக்கிலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பிப்பதற்காகவேகூட குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக முன்வருகின்றனர். இதுபோன்ற நேர்வுகளில் பாதிக்கப்பட்ட, குறிப்பிட்ட பெண்ணின் எதிர்காலம் – பாதுகாப்பு தொடர்பாக எவ்விதமான வழிகாட்டி நெறிமுறைகள் ஏதும் தற்போது இல்லை.
தாமதமாகும் நீதியைத்தான் மறுக்கப்படும் நீதி என்பார்கள். மட்டுமல்ல, அறிஞர் தியோடர் ரூஸ்வெல்ட் கூறுவதுபோல, சரிக்கும் தப்புக்கும் இடையே நடுநிலையாக இருப்பது அல்ல நீதி; தப்புக்கு எதிராக, காணுமிடங்களில் எல்லாம் சரியைக் கண்டுபிடித்து அதை உயர்த்திப் பிடிப்பதே நீதி!
கடன் அரசு!

இந்தியாவின் தற்போதைய கடன் ரூ. 181 லட்சம் கோடிகள். வரும் ஆண்டில் இந்தக் கடன்தொகை ரூ. 196 லட்சம் கோடிகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1947 முதல் 2014 வரையிலும் இந்தத் தொகை ரூ. 50 லட்சம் கோடிகள். அப்படியென்றால் கடந்த பத்து, பதினொரு ஆண்டுகளில் அதிகரித்துள்ள கடன் மட்டும் ரூ. 131 லட்சம் கோடிகள்!
இப்படியே போனால் என்னவாகும்? இந்தியக் குடிமகன் என்ற முறையில் ஒரு நபருக்குள்ள கடன் சுமை அல்லது பொறுப்பு எவ்வளவு இருக்கும்?