ரூ. 1,600 கோடி ஆலை; முத்தையா முரளிதரனுக்கு ஜம்மு காஷ்மீரில் இலவச இடம்?!; கிளம்பிய எதிர்ப்பு
ஜம்மு காஷ்மீரில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் கேன் பிரைவேட் லிமிடெட் நிறுவன (Ceylon Beverage Can Pvt Ltd) ஆலை அமைக்க ஜம்மு காஷ்மீரில் இலவசமாக இடம் ஒதுக்கிய விவகாரம் சட்டமன்றத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக ஜூன் மாதம், கதுவா பாக்தாலி தொழிற்பேட்டையில் சிலோன் பீவரேஜ் கேன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 1,600 கோடியில் பாட்டில் நிரப்புதல் மற்றும் அலுமினிய கேன்கள் தயாரிக்கும் ஆலை அமைக்க 25.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் நேற்று சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கேள்வி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஒய் தாரிகாமி, ``இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜம்மு காஷ்மீரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. எப்படி இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது?’’ என முத்தையா முரளிதரனின் பெயரைக் குறிப்பிடாமல் கேள்வியெழுப்பியனார்.

அதேபோல், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.ஏ.மிர், ``இந்தியர் அல்லாத கிரிக்கெட் வீரருக்கு ஒரு பைசா கூட செலவழிக்காமல் நிலம் வழங்கப்பட்டது. இது ஒரு தீவிரமான பிரச்னை. இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும்." என்றார். பின்னர் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த விவசாய அமைச்சர் ஜாவேத் அஹ்மத் தார், ``இது வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட விஷயம். எங்களிடம் எந்த தகவலும் இல்லை. உண்மை நிலவரத்தை அறிய ஆய்வு செய்வோம்." என்றார்.