மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
``என் தாய்க்கு பெரும்பங்கு உண்டு'' - சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான நெல்லை பேராசிரியை உருக்கம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினேன் என்கிறார், பேராசிரியர் விமலா.
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் இலக்கியத்தை மேம்படுத்த, அம்மொழிகளின் படைப்பாளிகளை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்கள் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்படுவது போல, இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளை பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
இலக்கியம் சார்ந்த விருதுகளில் உயரிய விருதாகக் கருதப்படும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, இந்த ஆண்டு 21 இந்திய மொழிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் மொழிக்கு விமலா தேர்வு தேர்வாகியுள்ளர். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.
மலையாள மொழியில் நளினி ஜமிலா என்ற எழுத்தாளரின் படைப்பில் வெளியான `எண்ட ஆண்கள்' என்ற நூலை தமிழில் `எனது ஆண்கள்' என்ற தலைப்பில் விமலா மொழி பெயர்த்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியுள்ள விமலா, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், எளிய குடும்ப பின்னணியைக் கொண்டவர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தவர். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நான்கு நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்றது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக பேராசிரியர் விமலா தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் மிகவும் வறுமையான சூழலில் வளர்ந்தேன். நான் சிறு வயதாக இருந்தபோதே எனது தந்தை இறந்துவிட்டார். அதன் பின்னர் எனது குடும்பத்தை அம்மா மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். அரசு மருத்துவமனையில் சூடான குடிநீரை விற்பனை செய்து எங்களை படிக்க வைத்தார். ஒரு முறை சூடான தண்ணீரைக் கொண்டு செல்லும்போது அம்மாவின் இடுப்பில் கொட்டிவிட்டது. அவரது உடல் வெந்து மிகவும் சிரமப்பட்டதைப் பார்த்து வருத்தமாக இருந்தது. சொற்ப வருமானத்தில் எங்களைப் படிக்க வைப்பதை உணர்ந்து நன்றாகப் படித்தேன்
அம்மாவால் என்னை படிக்க வைக்க முடியவில்லை. அதனால் இளங்கலை பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வியில் படித்தேன். மேற்படிப்பை முடித்து ஆராய்ச்சி படிப்புக்கு விண்ணப்பித்த போது, தொலைதூரக் கல்வியில் இளங்கலை படித்திருந்ததால் எனக்கு ஆராய்ச்சி படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எனக்கு வாய்ப்பு கொடுத்தது. அங்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரண்டு மொழிகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக நான் மலையாளத்தை கற்றுக் கொண்டேன். அதன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு அந்த மொழியில் இருந்து இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தேன்.

மொழிபெயர்ப்பு என்பது எனக்கு மிகவும் விருப்பமான பணி. நான் ஏற்கெனவே நான்கு நூல்களை மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். கடைசியாக, நளினி ஜமீலா எழுதிய `எண்டே ஆண்கள்' புத்தகத்தை தமிழில் `எனது ஆண்கள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தேன். அதற்காக எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை இந்த அளவுக்கு உயரச் செய்ததில் என் தாய்க்கு பெரும்பங்கு உள்ளது. அதனால் இந்த விருதை என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
சாகித்ய அகாடமி விருது பெறும் விமலாவுக்கு தூய சவேரியார் கல்லூரி நிர்வாகத்தினர் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
