வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்; மீன் மார்க்கெட் வளாக மேடைக்கடைகள் சீரமைப்பு பணியிலிறங்கிய அதிகாரிகள்
வேலூர் மாநகராட்சியில் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி மேடைக்கடைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கடைகள் கட்டப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருப்பது குறித்து, கடந்த அக்டோபர் மாதம் விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன் பிறகு இதன் சீரமைப்பு பணிகள் எப்போது தொடங்கும் என்று விகடன் சார்பாக மாநகராட்சி ஆணையரிடம் தொடர்ந்து கேட்டறிந்தோம். அதன் விளைவாக தற்போது திறந்தவெளி மேடைக்கடைகளின் சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளது மாநகராட்சி.
கடந்த அக்டோபர் மாதம் விகடன் தளத்தில் வெளியிட்ட செய்தியில் பொதுமக்கள், “பயன்படுத்தாமல் இருக்கும் இந்தக் கடை வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேற்கூரைகள் எல்லாம் சீரமைத்து, கழிவறை வசதிகள் எல்லாம் ஏற்படுத்திக் கொடுத்தால் பொது மக்கள் இந்த வளாகத்திற்கு வந்து செல்வதற்கு சுலபமாக இருக்கும்.” என்று கூறி இருந்தனர். இது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இதனை பற்றி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் வியாபாரிகளுக்கான கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டு உள்ளது. வியாபாரிகள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை மீண்டும் திறந்தவெளி மேடைக்கடை வளாகத்தில் வியாபாரம் செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கிறோம்” என்று கூறி இருந்தார்.
அதன்படி மாநகராட்சியில் கூட்டம் போட்டு இந்த திறந்த வெளி கடைகளின் மேற்கூரைகள், கழிவறைகள் சீரமைப்பு செய்யவும், மின்சார வசதியை ஏற்படுத்தி தரவும் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த சீரமைப்பு பணிகளை கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வேலூர் தொகுதி எம்.எல்.ஏ கார்த்திகேயன் மற்றும் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். ஆனாலும் இந்த சீரமைப்பு பணிகள் தொடங்கப்படாமல் அப்படியே இருந்தது. இது குறித்து எப்போது அந்த பணிகள் தொடங்கும் என்று மாநகராட்சி ஆணையரிடம் விகடன் சார்பாக கேட்டபோது “இந்த மறுசீரமைப்பு பணிகள் ஒப்பந்ததாரருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அவர் பணிகளை விரைவில் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். சில வாரங்களில் பணிகள் தொடங்கும்” என்று கூறி இருந்தார்.






அதன்படி தற்போது இந்த திறந்தவெளி கடைகளின் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய நடைமேடை கடை வியாபாரி ஒருவர், “நீண்ட நாட்களாக இந்தக் கடைகள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. தற்போது இதன் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி. நாங்கள் விரைவில் உள்ளே கடை அமைக்க உள்ளோம். எங்கள் கோரிக்கையினையும் செய்தியாக வெளியிட்ட விகடனுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.