நித்தியானந்தா சீடர்களை ஆசிரமத்திலிருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றிய போலீஸ்! நடந்தது என்ன?
ராஜபாளையம் அருகே காட்டுப்பகுதியில் நீதிமன்ற உத்தரவினை மீறி இரு வேறு இடங்களில் ஆசிரமங்கள் கட்டி வாழ்ந்து வந்த நித்தியானந்தா சீடர்களை வருவாய் துறையினரும், போலீசாரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேசன். இவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.

மருத்துவர் கணேசன் தானமாக வழங்கிய இடம்
18 வருடங்களுக்கு முன்பாக, நித்தியானந்தாவின் தீவிர பக்தராக இருந்தார். அந்த சமயத்தில் நித்தியானந்தா மீதிருந்த அதீத ஆன்மிக ஈடுபாடு காரணமாக, கோதை நாச்சியார்புரம் கிராமத்தில் தனது சொந்தமான 4 ஏக்கர் நிலம், சேத்தூர் மலையடிவார பகுதியில் உள்ள சுமார் 37.75 ஏக்கர் நிலம் ஆகியவற்றை நித்தியானந்தா தியான பீடத்திற்கு கணேசன் தானமாக வழங்கி பத்திரப்பதிவு செய்துக்கொடுத்துள்ளார்.
இதனையடுத்து பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களும், சமூக விரோத செயல்களும் நித்தியானந்தா தியான பீடத்தில் நடைபெறுகிறது, அதில் தியான பீட நிறுவனர் நித்தியானந்தருக்கு நேரடி தொடர்பிருக்கிறது என செய்திகள் வெளியான நிலையில் மருத்துவர் கணேசன் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கணேசன்
இதனைதொடர்ந்து, நித்தியானந்தா தியான பீடத்திற்கு தானமாக வழங்கிய நிலங்கள் ஆன்மிக நோக்கங்களுக்கு விரோதமாக மேனேஜிங் டிரஸ்ட்டியான பரமஹம்ச நித்தியானந்தர் பயன்படுத்தி வருவதாக கணேசனுக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து தான் நன்கொடையாக வழங்கிய நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்து 40 ஏக்கர் நிலத்தையும் மீட்டுத்தருமாறு நீதிமன்றத்தில் மருத்துவர் கணேசன் வழக்கு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையில் நிலம் தொடர்பான வழக்குகளில் தலையிட விரும்பாத கணேசன், வழக்குக்குட்பட்ட 40 ஏக்கர் நிலத்துக்கும் பவர் ஏஜென்டாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரை நியமித்து எழுதிக் கொடுத்தார். இதனையடுத்து பவர் ஏஜெண்ட் சந்திரனுக்கும், நித்தியானந்தா தியான பீட சீடர்களுக்கும் இடையே நிலத்தை உரிமை கொண்டாடுவது தொடர்பாக அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கு நிலுவையில் உள்ளபோது இருதரப்புக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்படுவதை தடுப்பதற்காக, பவர் ஏஜென்ட் சந்திரன் மற்றும் நித்தியானந்தா ஆசிரம சீடர்கள் என யாரும் அந்த நிலத்தை பயன்படுத்தக்கூடாது. அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி, சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில் இருவேறு ஆசிரமங்கள் கட்டி அதில் நித்தியானந்தா சீடர்கள் மற்றும் சிஷ்யைகள் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின்பேரில், தாசில்தார் ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஆசிரமங்களில் தங்கியிருக்கும் சீடர்களை வெளியேற கூறினர். ஆனால், அவர்கள், ஆசிரமத்தை விட்டு வெளியேற மறுத்து ஆசிரம அறை கதவுகளை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பேசிய அதிகாரிகள், இரண்டு நாள்களுக்குள் இடத்தை காலி செய்யாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துவிட்டு சென்றனர். இந்தநிலையில் அதிகாரிகள் கொடுத்த இரண்டு நாள் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், நித்தியானந்தா சீடர்கள் யாரும் அங்கிருந்து வெளியேறவில்லை.
சீல் வைத்த அதிகாரிகள்
இதனையடுத்து தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும் ராஜபாளையம் சரக துணை காவல் கண்காணிப்பாளர் பிரீத்தி தலைமையிலான போலீஸார், கோதைநாச்சியார்புரம் மற்றும் சேத்தூர் மலையடிவாரம் ஆகிய இருவேறு இடங்களுக்குச் சென்று அங்கு ஆசிரமத்தில் தங்கியிருந்த பரமஹம்ச நித்தியானந்தரின் சீடர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி சீல் வைத்தனர்.

ஆசிரமத்துக்குள் மீண்டும் நுழைந்த சீடர்கள்
அப்போது ஆசிரமங்களை விட்டு வெளியேறியவர்கள், நள்ளிரவு 12 மணிக்கு பின்பு சேத்தூர் காட்டுப்பகுதிக்குள் உள்ள ஆசிரமத்திற்கு மீண்டும் சென்று கதவுகளில் வைக்கப்பட்டிருந்த 'சீல்'-ஐ உடைத்து அத்துமீறி ஆசிரமத்துக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தங்களுக்கு சொந்தமான இடத்திலிருந்து எங்களை வலுக்கட்டாயமாக அதிகாரிகள் வெளியேற்றுகின்றனர். பரமஹம்ச நித்தியானந்தருக்கும் தங்களுக்கும் அநீதி நடந்துள்ளது என இருட்டான அறைக்குள் சிவலிங்கத்தை கட்டிப்பிடித்தவாறு சீடர்கள் அழுது புலம்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதுபற்றி அறிந்த சேத்தூர் காவல்துறையினர் நள்ளிரவில் மீண்டும் சென்று ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்தவர்களை வெளியேற்றினர்" என்றனர்.
இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
