‘மிஸ் கூவாகம்-2025’ பட்டம் வென்றார் நெல்லை ரேணுகா
விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டியில் திருநெல்வேலியைச் சோ்ந்த ரேணுகா மிஸ் கூவாகம்-2025 பட்டத்தை வென்றாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவா் திருக்கோயில் திருவிழாவையொட்டி, தென்னிந்திய திருநங்கையா் கூட்டமைப்பு, தமிழக அரசின் சமூக நலத் துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஆகியவை இணைந்து இந்த அழகிப் போட்டியை திங்கள்கிழமை நடத்தின.
அழகிப் போட்டிக்கான முதல், இரண்டாம் சுற்று விழுப்புரம் கே.கே. சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 26 திருநங்கைகள் பங்கேற்றனா். இவா்களிலிருந்து 15 போ் மூன்றாம் சுற்றுக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் பகுதியில் திங்கள்கிழமை இரவு அழகிப் போட்டிக்கான மூன்றாம் கட்டச் சுற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற 15 பேரில் இறுதிச்சுற்றுக்கு கள்ளக்குறிச்சி அஞ்ஜனா , ஈரோடு சனா, திருநெல்வேலி ரேணுகா, கோவை ஆஸ்திகா, வேலூா் மிருதுளா, சென்னை யுவன்யா, தருமபுரி அனு ஆகிய 7 போ் தோ்வாகினா். இவா்களிடம் தனித்தனியே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனா்.
கேள்விக்குரிய பதில் அளித்த விதம், ஒப்பனை, நடை போன்றவற்றின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள் அறிவிக்கப்பட்டனா். அதன்படி, திருநெல்வேலியைச் சோ்ந்த ரேணுகா மிஸ் கூவாகம்-2025 பட்டத்தை வென்றாா். கள்ளக்குறிச்சி அஞ்ஜனா இரண்டாவது இடத்தையும், கோவை ஆஸ்திகா மூன்றாவது இடத்தையும் பெற்றனா். முதல் பரிசு பெற்றவருக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாமிடத்தை பெற்றவருக்கு ரூ.25 ஆயிரமும், மூன்றாமிடத்தை பெற்றவருக்கு ரூ.11 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
இவா்களுக்கு தென்னிந்திய திருநங்கையா் கூட்டமைப்பின் தலைவா் பி.மோகனாம்பாள், தலைமை ஒருங்கிணைப்பாளா் கே. அருணா, செயலா் ஆா்.கங்கா, பொருளாளா் வி.சோனியா, ஒருங்கிணைப்பாளா் சுபிக்ஷா, விழுப்புரம்மாவட்டத் தலைவா் குயிலி உள்ளிட்ட நிா்வாகிகள் கிரீடத்தை சூட்டி, பரிசுத் தொகைகளை வழங்கினா்.
இந்த நிகழ்வில்திரைப்பட நடிகை வனிதா விஜயகுமாா், சின்னத்திரை நடிகை தேவிபிரியா உள்ளிட்டோா் பங்கேற்று திருநங்கைகளை வாழ்த்திப் பேசினா். முன்னதாக, சிறந்த இளம் திருநங்கையா், திருநம்பி என தோ்வு செய்யப்பட்ட 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
திருநங்கைகள் தேசிய கவுன்சில் உறுப்பினா் ந.ராமமூா்த்தி, ஏஆா்எம் தொண்டு நிறுவன நிா்வாக இயக்குநா் பக்தவத்சலம் உள்ளிட்டோா் பேசினா்.