Bangladesh: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை! - வங்கதேசத்தில் நடப்பது என்ன?
வங்காள தேசம்நாட்டில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதற்காக பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் அவாமி லீக் மற்றும் அதன் தலைவர்கள் மீதான விசாரணை முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளதாக ராய்டர்ஸ் செய்திதளம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2024-ல் நடந்த தீவிர அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பல்வேறு மாணவர் அமைப்புகள், புதிய கட்சியான தேசிய குடிமக்கள் கட்சி மற்றும் சில அரசியல் கட்சிகள் அவாமி லீக் கட்சியை தடை செய்ய வலியுறுத்தி போராடியதன் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏன் தடை?
கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான எழுச்சியில் முக்கிய தலைவராக இருந்த ஹஸ்னத் அப்துல்லா கடந்த வாரம் தாக்குதலுக்கு உள்ளானார்.
இந்த தாக்குதலுக்கு ஹசீனாவின் அவாமி லீக் ஆதரவாளர்கள்தான் காரணம் எனக் கருதப்பட்டது. அவாமி லீக் மற்றும் அதன் ஆதரவு இயக்கங்களைச் சேர்ந்த 54 பேரை இந்த விவகாரத்தில் காவல்துறை கைது செய்துள்ளது.

அவாமி லீக் கட்சிக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற குரல் அதிகரித்தது.
கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள் பலர் கொல்லப்பட்டதனால், அவாமி லீக் தலைவர்கள் மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுச்சியில் முன்னின்ற செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவாமி லீக் கட்சியை தடை செய்வதாக வங்காளதேசம் அரசு கூறியுள்ளது.
தேர்தலில் பங்கேற்க முடியாது...!
வங்காள தேச தேர்தல் கமிஷன், வரவிருக்கும் மத்திய தேர்தலுக்காக செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் பதிவை நிறுத்தி வைத்துள்ளது.
தடை காரணமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக வங்காள தேசத்தை ஆட்சி செய்த அவாமி லீக் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் பங்கு பெறுவது மட்டுமல்ல, கட்சியின் பெயரில் அறிக்கை வெளியிடுதல், ஊடகங்களில் பேசுதல், ஆன்லைன் அல்லது சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்தல், ஊர்வலங்கள், பேரணிகள், மாநாடு நடத்துதல் உள்ளிட்ட அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.