செய்திகள் :

INDIA : `இந்தியாவின் பெரியண்ணனா அமெரிக்கா?’ - இந்திய அரசின் வெளியுறவில் என்ன சிக்கல்? | Depth

post image

'தாக்குதல் நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது. இரு நாடுகள் பிரச்னையில் 'நடுநிலை’ என்ற அமெரிக்காவின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய, நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா?” என்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தது குறித்து காங்கிரஸ், மத்திய அரசுக்கு சரமாரியானக் கேள்விகளை முன்வைத்திருக்கிறது.

இந்தியா- பாக் - ட்ரம்ப்
இந்தியா- பாக் - ட்ரம்ப்

பாகிஸ்தான் மட்டுமல்ல, ஆசியாவில் தன்னைச் சுற்றியிருக்கும் அண்டை நாடுகள் பலவற்றுடனும் இந்தியாவுக்கு பிரச்னை இருக்கவே செய்கிறது. இலங்கை, வங்கதேசம், சீனா என யாருமே இந்தியாவுக்கு இணக்கமாக இல்லை. இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் மூன்றாவதாக ஒரு நாட்டின் தலையீடு, அண்டை நாடுகளின் இணக்கமில்லாதத் தன்மை ஆகியவை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மீது நிறைய கேள்விகளை எழுப்புகிறது.

'பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்த தீவிரவாத முகாம்களை நோக்கிய இந்தியாவின் பதிலடியும், அதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையில் உருவான பதற்றமும் அடுத்தடுத்த எதிர்விளைவுகளே. ஆனால், இது நீடித்த போராகிவிடக் கூடாது. இந்த முடிவு இந்திய நலனில் இருந்து, நம்மால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும்.

ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இந்த சண்டை நிறுத்தம் தங்களால் ஏற்பட்டதாகக் கூறி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 பதிவுகளை செய்துள்ளார். அவருடைய இரண்டாவது பதிவில், காஷ்மீர் பிரச்னையில் நடுநிலை வகிக்க விரும்புவதாக உள்ளது. அமெரிக்கா தன்னை இந்தியாவின் பெரியண்ணனாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதை செய்கிறது.' எனப் பேசத் தொடங்கினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிந்தன்.

சிந்தன்
சிந்தன்

மேலும் தொடர்ந்தவர், ``சில மாதங்களுக்கு முன், உக்ரைன் அதிபரை அமெரிக்காவுக்கு அழைத்துப் பேசிய டொனால்ட் ட்ரம்ப், அவரை தொலைக்காட்சி நேரலையில் மிரட்டிப் பணியவைத்து, கனிம வளச் சுரங்கங்களைச் சுரண்டுவதற்கான அனுமதியை வாங்கியது. காசா பகுதியில் வாழும் மக்களை வெளியேற்றிவிட்டு அங்கே சுற்றுலா மையம் அமைக்கப்போகிறேன் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதே பாணியில் அவர் காஷ்மீரின் கனிம வளங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் குறிவைக்கிறாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

நம் நாட்டு ஆட்சியாளர்கள் கடுமையான எதிர்வினையின் மூலம் அமெரிக்காவை எட்ட நிறுத்த வேண்டும். ஒரு இளைய பங்காளியைப் போல கமுக்கமாக இருப்பது நமது நாட்டின் எதிர்காலத்திற்கும், மதிப்புக்கும் நல்லதல்ல”. என்றார்.

மேற்கொண்டு பாகிஸ்தான் தவிர்த்த அண்டை நாடுகளுடனான உறவு பற்றி பேசியவர், 'இலங்கையிலும், வங்கதேசத்திலும் ஆட்சி மாற்றத்திற்கு பின் நம் நாட்டுடனான நட்புறவு பற்றிய கேள்விகள் எழுந்தன. இலங்கையில் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டமும், வங்கதேசத்திற்கும் அதானி நிறுவனத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட மின்சார ஒப்பந்தமும் அந்தந்த நாடுகளில் ஊழலுக்கு எதிரான எழுச்சியில் பேசுபொருளாகின.

இவ்வாறான காரணங்களும், காரணம் ஏதுமின்றியும் இந்தியா தமது அண்டை நாடுகளிடமிருந்து தனிமைப்படுவது கவலைக்குறியதாகும்.

இந்தியா- சீனா
இந்தியா- சீனா

இந்தப் பிரச்னையை மற்றொரு கோணத்திலும் பார்க்கலாம். சீனா – அமெரிக்கா இடையிலான முரண்பாடுகள் தீவிரமடையும் சூழலில், இந்தியா சில பல்துருவப் பொருளாதார கூட்டு என்ற அம்சத்தில் சீனாவோடும், வளரும் நாடுகளோடும் நிற்கிறது. ஆனால் ராணுவக் கூட்டு என்ற அம்சத்தில் அமெரிக்காவோடு நெருங்குகிறது. இந்த அணுகுமுறை நமது பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் என்பதால் அண்டை நாடுகள் நம்மை விட்டு விலக ஒரு காரணமாகிறது.

விஸ்வகுரு என்ற பதாகையுடன் கட்டமைக்கப்படும் மோடியின் பிம்பம் வெற்று அரசியல் பிரச்சாரமே ஆகும். இந்த பிம்பத்தை கட்டமைப்பதற்காக அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் பிரதமர் மோடி பங்கேற்று டொனால்ட் ட்ரம்புக்காக பிரசாரம் செய்தார். ஆனால் அது பாதகமாக முடிந்தது. அண்மையில், காசாவுக்கு எதிரான இனப்படுகொலைத் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியபோது, இந்தியாவிலிருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்தன. இதுவும் நம்முடைய நீண்டகால நன்மதிப்பை குலைத்தது.

வெளியுறவுக் கொள்கையை, உள்நாட்டு அரசியல் தேவைக்காக திரித்து முன்னெடுத்தால், அது நம் நாட்டின் நன்மதிப்பைக் குலைக்கவே செய்யும். அதுதான் நடக்கிறது. நேரு, அணிசேரா நாடுகளின் தலைவர் என வர்ணிக்கப்பட்டார். அவரின் பஞ்சசீல கொள்கைகள் இன்றும் பிரபலமானவை. அணி சேராமல் நின்றோம் என்றாலும், தனியாக நிற்கவில்லை. சோசலிச நாடுகளின் உதவிகளை பெற்றோம். முதலாளித்துவ நாடுகளோடும் நாம் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டோம்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

அமெரிக்காவின் எல்லை மீறியத் தலையீட்டை நிராகரித்த உதாரணங்களும் உண்டு. அவ்வாறான இந்திரா காந்தியின் பேச்சு இப்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது. இருப்பினும் இதுபோன்ற வெளியுறவு கொள்கைகள் தனியொரு தலைவரை சார்ந்து மாறி வந்தவை அல்ல. கால நிலைமைகளுக்கு ஏற்ற விதத்திலேயே மாறியுள்ளது.

உண்மையில், ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை பெரும்பாலும் அரசாங்க அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், வர்த்தகம், கடன், வங்கி நடவடிக்கைகள், ராணுவக் கூட்டுக்கள் போன்ற பல அம்சங்களில் வெளிப்படும்.

அவ்வாறு பார்க்கும்போது, மோடி ஆட்சிக் காலத்தில் நமது வெளியுறவுக் கொள்கை மிகவும் தடுமாற்றத்துடனே பின்பற்றப்பட்டதாக பார்க்கிறேன். அமெரிக்காவில் ஆவணமில்லாமல் குடியிருந்த இந்தியர்களை திரும்ப அனுப்பும்போது அவர்கள் கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டிருந்தது. ராணுவ விமானங்களில் அவர்கள் இந்தியாவிற்குள் அனுப்பப்பட்டார்கள். இதுபோன்ற அவமதிப்புக்களை நாம் உறுதியாக எதிர்க்க முடியாமைக்கு, தடுமாற்றமான கொள்கையே காரணம்.' என்றார்.

மேலும் இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன், 'இந்தியாவுடைய வெளியுறவுக் கொள்கையில் கருத்தியல்ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை. 'SAGAR' என நம்முடைய அண்டை நாடுகள் எல்லாவற்றையும் அரவணைத்து போகக் கூடிய ஒரு கொள்கை இருக்கிறது. 'Look East' என ஒரு கொள்கை இருக்கிறது.

அதாவது, கிழக்கில் இருக்கக்கூடிய ஆசிய நாடுகளை நாம் அணுகலாம். அவர்கள் நம்மை அரவணைத்துக் கொள்வார்கள் என்கிற கொள்கை இது. இப்படி கருத்தியல்ரீதியாக இந்தியாவின் கொள்கைகள் வலுவாகத்தான் இருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் நிலைமை வேறாக இருக்கிறது. நாங்கள் உனக்கு இதை செய்தோம். அதற்காக நீங்கள் எங்களுக்கு இதைச் செய்யுங்கள் என்பதாகத்தான் இந்தியா அண்டை நாடுகளை அணுகுகிறது.

ஆர்.கே ராதாகிருஷ்ணன்
ஆர்.கே ராதாகிருஷ்ணன்

மேலும், கார்ப்பரேட்களுக்காக குறிப்பாக அதானிக்காக செயல்படக்கூடிய அரசாக இந்த அரசு இருக்கிறது. இதுதான் பிரச்சனை. இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலோடு இணக்கமாக இல்லையென்றாலும் அவர்களோடு சண்டையும் கிடையாது. ஆனால், இந்தியா இஸ்ரேலோடு அதிக இணைக்கம் காட்டியது. இதை அரபு நாடுகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. துருக்கி, மலேசியா, மாலத்தீவு போன்ற நாடுகள் உச்சக்கட்ட இஸ்ரேல் எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள்.

அவர்களும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை பரப்புவார்கள். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்த போது மிகச்சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது ரொம்பவே அக்ரஸிவ்வாக சில கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

எதற்கெடுத்தாலும் நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் மேற்கத்திய நாடுகள் சொல்வதை கேட்கமாட்டோம் என வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கிறார். இந்தியா இதையெல்லாம் முன்பும் செய்துகொண்டுதான் இருந்தது. முன்பு ராஜதந்திரரீதியில் சமயோஜிதமாக செய்ததை இப்போது அப்படியே வெளியில் வெளிப்படையாக பேசுகிறார். இதனால்தான் பல நாடுகளுக்கும் இந்தியாவுடன் முரண் ஏற்படுகிறது.

இலங்கையில் 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்றார். அங்கே பெட்ரோல் ஸ்டேசன்களுக்கு சென்றார். வரிசையாக பல கி.மீ- களுக்கு வாகனங்கள் நிற்கும். அதையெல்லாம் பார்வையிட்டார். அந்த நாட்டு அரசியல்வாதிகள் கூட அதை செய்யவில்லை. அதனால்தான் இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவின் மீது எதிர் மனநிலைக்குச் சென்றனர்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

அதேமாதிரி, இந்தியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதையும் இஸ்லாமிய நாடுகள் கவலையோடு பார்க்கின்றன. அதை அவர்களுக்கு சௌகரியப்பட்ட சமயத்தில் இந்தியாவுக்கு எதிராக நிற்க பயன்படுத்தியும் கொள்கின்றன. சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு இப்போதுதான் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையில் மூன்றாவது நாடாக அமெரிக்கா மூக்கை நுழைத்திருக்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் காகிதத்தில் சிறப்பாகத்தான் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துவதில்தான் தடுமாறுகின்றனர்.' என்றார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.கே முரளிதரனிடம் பேசினோம். இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “ ஆட்சிக்கு வந்ததில் இருந்தே 50 ஆண்டுக் காலமாக நாம் பின்பற்றி வரக்கூடிய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு மாறாகத்தான் பாஜக செயல்பட்டு வருகிறது. இந்திரா காந்தி, நேரு, ராஜிவ் காந்தி எல்லாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது அணிசேரா நாடுகளின் தலைமையாக இந்தியா இருந்தது. நாம் அமெரிக்காவுடனும் சேரவில்லை, ரஷ்யாவுடனும் சேரவில்லை. அமெரிக்கா- ரஷ்யாவை எதிர்க்கவும் இல்லை. எளிய நாடுகளுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் இந்தியா இருந்தது.

உலக வரைப்படங்களிலேயே சீனாவுக்கு சவால் விடுகிற நாடு இந்தியா தான். உலக சந்தை மதிப்பில் இந்தியாதான் 3-வது இடத்தில் இருக்கிறது. சீனப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கு இந்தியா ஒரு அத்தியாவசியமான ஒரு நாடக இருக்கிறது. ஆனால் ஏற்றுமதி- இறக்குமதி கொள்கையில் இந்தியா- சீனா இடையே பிரச்னை இருப்பதால் கொரியப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.

காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.கே முரளிதரன்
காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.கே முரளிதரன்

வியாபார விஷயத்தில் நம்மை அடிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக சீனா அரசு என்ன செய்கிறது என்றால் ‘ஒரு மரத்தை முறிக்க வேண்டும் என்றால் அந்த மரத்திற்கு முட்டுக்கொடுப்பதை அகற்றி விட்டால் மரம் அதுவாகவே கீழே விழுந்துவிடும்’ அதேபோல இந்தியாவிற்கு அருகில் இருக்கக்கூடிய அண்டை நாடுகள் எல்லாவற்றையும் தன்னுடைய கட்டுபாட்டிற்குள் சீனா கொண்டுவர நினைக்கிறது. இதனால் இந்தியா ஆதரவற்ற நாடாக இருக்கும். அருகில் இருக்கக்கூடிய நாடுகள் உடன் எல்லாம் பிரச்னையாக இருந்தால் சீனாவிற்கு இந்தியாவை வீழ்த்துவது மிகவும் எளிது.

அதாவது வணிகம், போர் என எல்லாவற்றிலும் வீழ்த்துவது சீனாவிற்கு எளிதாக இருக்கும். நமது அண்டை நாடுகளில் சீனாவின் ஊடுருவல் மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் பல ஆயிரம் கிலோ மீட்டர்களை சீனா அருணாசலப்பிரதேசத்தில் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. பிரதமர் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சீனாவைப் பற்றி பேசுவதற்கு நடுங்குகிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ அதேபோல இந்தியா- பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் முதலில் அறிவித்தது இந்தியா எந்த அளவிற்கு பலவீனப்பட்டு இருக்கிறது என்பதற்கு சான்றாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் நேபாளம் இந்தியாவிற்கு நெருக்கமாக இருந்தது. ஆனால் இன்று முழுக்க முழுக்க சீனாவின் பக்கம் சென்றுவிட்டது. அதேபோல இந்தியாதான் வங்காளத் தேசத்தை உருவாக்கியது.

நாடுகள்
நாடுகள்

ஆனால் தற்போது வங்காள தேசம் கொஞ்சம் கொஞ்சம் ஆக மாறி இப்போது இந்தியாவிற்கு எதிராக மாறிவிட்டது. மாலத்தீவும் சீனாவுடன் இணைக்கமாகிவிட்டார்கள். அண்டை நாடுகளிலேயே இப்போது நம்முடன் இருப்பது பூட்டான் மட்டும்தான். இலங்கையும் நாம் எவ்வளவு ஆதரவு தெரிவித்தாலும் சீனாவின் பக்கம்தான் செல்கிறார்கள். இப்படி வெளியுறவுக் கொள்கையில் முழுக்க முழுக்க தோற்று போய் நிற்கிறது பாஜக அரசு” என சொல்லி முடித்தார்.

விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறித்து தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்கிற மிகப்பெரிய ஒரு தாக்குதலை இந்திய அரசு அரங்கேற்றி வென்றிருக்கிறது. 11 வான் தளங்களை நீர்மூலமாக்கி பாகிஸ்தான் அரசு இன்று மட்டும் அல்ல, எதிர்காலத்திலும் எழுந்து நிற்பதற்கு கூடத் தயங்கி நிற்கும் ஒரு சூழலை உருவாக்கி இருக்கிறது இந்திய அரசு. இதனைப் பாராட்டுவதற்கு மனம் இல்லாமல் எல்லாவற்றிலும் அரசியலைப் புகுத்திக்கொண்டிருக்கிறது காங்கிரஸ்.

பாராளுமன்ற உறுப்பினரும், மூத்தத் தலைவருமான சசி தரூர், “யார் வேண்டுமானாலும் இந்த அங்கீகாரத்தை எடுத்துகொள்ளட்டும். ஆனால் இந்தியா என்றைக்குமே போரை விரும்பியது இல்லை. இந்தியா தன்னுடைய இலக்கை அடைந்திருக்கிறது. இந்தியா எதை செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறது. தாங்கள்தான் இந்தத் தாக்குதல் நிறுத்தத்திற்கு காரணம் என்று யார் சொன்னாலும் அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை” என்று சொல்லி இருக்கிறார். காங்கிரஸும் சசி தரூர் கூறியதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி
தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி

அப்படி இல்லாமல் விமர்சனம் செய்துக்கொண்டிருந்தால் காங்கிரஸ் இதிலும் மலிவான அரசியலைத்தான் செய்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அண்டை நாடுகளுடன் இந்தியாவிற்கு பிரச்னை என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் அதற்கு என்ன தரவுகள் இருக்கிறது. தீவிரவாதத் தாக்குதலின்போது அண்டை நாடுகள் எதுவும் இந்தியாவிற்கு எதிராக பேசவிலையே. காங்கிரஸ் இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறது என்றால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்று அல்லவா அர்த்தம் ஆகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேசப் பக்தியோடு இருக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய விருப்பமாக இருக்கிறது. தொடர்ந்து இந்த விவகாரத்தில் தேவை இல்லாமல் இந்தியா மீது சந்தேகப்படுவதும், இந்திய இராணுவத்தின் மீது சந்தேகப்படுவதும், இந்திய பிரதமர் மீது சந்தேகப்படுவதுமாக இருகிறார்கள் இது தவறானது. காங்கிரஸ் கட்சி தேசத்தின் நலன் கருதி தனது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"துணிச்சலின் உருவம்" - Ind-Pak தாக்குதலுக்குப் பின்னர் விமானப் படையினரைச் சந்தித்த மோடி |Photo Album

Modi: 'உலக நாடுகள் தலையிட பாகிஸ்தான் கெஞ்சியது; இது இடை நிறுத்தம்தான் ' - மோடி உரையின் ஹைலைட்ஸ்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: "பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என நம்புகிறேன்" - தவெக விஜய்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது குறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பொள்ளாச்சி பாலியல் குற... மேலும் பார்க்க

Bangladesh: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை! - வங்கதேசத்தில் நடப்பது என்ன?

வங்காள தேசம்நாட்டில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்ற... மேலும் பார்க்க

Anbumani-யை எச்சரித்த ராமதாஸ் - மாநாட்டு மேடையில் நடந்தது என்ன? Off The Record Show | PMK

வன்னியர் சங்க இளைஞர் பெருவிழா மேடையில் அன்புமணிக்கும் மருத்துவர் ராமதாசுக்கு இடையில் உள்ள முரண்பாடு வெளிப்படையாக தெரிந்தது. இந்த மாநாட்டு பின்னணியில் நடந்தவைகள் குறித்து பேசுகிறது இன்றைய Off The Recor... மேலும் பார்க்க

Anbumani-யின் ரூட்மேப், Ramadoss வார்னிங், மாநாடு ஸ்கெட்ச்! EPS சபதம்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,பாமகவின் மாமல்லபுரம் மாநாட்டில் நான்கு முக்கியமான அம்சங்களை முன்வைத்து பேசினார் ராமதாஸ் மற்றும் அன்புமணி. இந்த மாநாட்டிலும், வெளிப்பட்ட அப்பா மகனுக்கிடையிலான மெல்லிய வார். இத... மேலும் பார்க்க