"ஆதார் இல்லாமல் வங்கிக் கணக்கை இயக்க இயலாதென எங்கு கூறப்பட்டிருக்கிறது?" - உச்ச நீதிமன்றம் கேள்வி!
வங்கிக் கணக்கோடு ஆதார் இணைக்காததைக் காரணம் காட்டி, 5,097 தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்வாதார இழப்பீட்டை ரத்து செய்தது டெல்லி அரசு. டெல்லி அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், "ஆதார் இல்லாமல் வங்கிக் கணக்கை இயக்கவே இயலாது என எந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
அபே ஓகா மற்றும் உஞ்சல் புயன் ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில், டெல்லி காற்று மாசு குறித்த 'எம். சி மேத்தா Vs மத்திய அரசு' என்ற வழக்கு கடந்த புதனன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, GRAP திட்டத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார இழப்பீடு தொடர்பான வாக்குமூலத்தை டெல்லி அரசு சமர்ப்பித்தது. டெல்லி அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், ஆதாரை வங்கிக் கணக்கோடு இணைக்காத தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி அபே ஓகா, "எந்தச் சட்டத்தில் ஆதார் இல்லாமல் வங்கிக் கணக்கை இயக்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது?" எனக் கேள்வி எழுப்பினார். மற்றும் இது குறித்து அடுத்த நீதிமன்ற அமர்வில் விவாதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
டெல்லி சுற்றுச்சூழல் துறையின் செயலாளர், டெல்லி கட்டடங்கள் மற்றும் பிற கட்டட தொழிலாளிகள் நல வாரிய செயலாளர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த வாக்குமூலத்தில், பாதிக்கப்பட்ட தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் ரூ. 8,000 வாழ்வாதார இழப்பீடாக வழங்க தீர்மானிக்கப்பட்டது எனவும், மொத்தமாக 93,272 பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 74,61,76,000 இழப்பீடாக வழங்க 3 டிசம்பர் 2024 அன்று நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், டெல்லி அரசு சமர்ப்பித்த வாக்குமூலத்தில், "ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும். பல முறை தொழிலாளர்களிடம் ஆதாரை வங்கிக் கணக்கோடு இணைப்பது குறித்து குறுஞ்செய்திகள் மூலம் தெரிவித்தோம். மார்ச் 25, 2025 வரை 5,907 தொழிலாளர்கள் ஆதாரை வங்கிக் கணக்கோடு இணைக்காததால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க இயலவில்லை. கட்டட வேலைகளோடு தொடர்புடைய 15 அரசாங்க துறைகளிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பான விவரங்களை கேட்டோம். ஆறு துறையிலிருந்து மட்டுமே பதில் கிடைத்தது.

மேலும், மாவட்டத்தின் தொழிலாளர் நல அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்க முயன்றோம். அதன் மூலம் 505 தொழிலாளர்களின் விவரங்கள் மட்டுமே கிடைத்தது. 36 தொழிற்சங்கங்களிடம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களது விவரங்களை கேட்டோம். 3 தொழிற்சங்கங்கள் மட்டுமே 82 தொழிலாளர்களின் விவரங்களை பகிர்ந்தன. அதில் 14 தொழிலாளர்களே இழப்பீடு பெற தகுதியானவர்கள். இழப்பீடு பெற தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு 2025 மார்ச் 25 மற்றும் மார்ச் 27 அன்று இழப்பீடு வழங்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.