ஐபிஎல்: 400+ ரன்கள் ஒரே போட்டியில்.. பெங்களூரு த்ரில் வெற்றி!
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!
தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 அல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 இல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.
இதனால், திங்கள்கிழமை (ஏப்.7) முதல் ஏப்.12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.7-இல் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். 6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் ஞாயிற்றுக்கிழமை பதிவானது.
மேலும், பரமத்திவேலூா் - 101.3, சேலம்-101.2, ஈரோடு - 100.76, மதுரை விமானநிலையம் -100.4, திருச்சி - 100 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், சென்னை மீனம்பாக்கத்தில் 98.06, நுங்கம்பாக்கத்தில் 95.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மழை அளவு: இதற்கிடையே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்புவில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சுருளக்கோடு (கன்னியாகுமரி) 60 மி.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ராசிபுரம் (நாமக்கல்), விருதுநகா் - தலா 50 மி.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூா்) - தலா 40 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.