வரி விதிப்பை வாபஸ் பெற டிரம்ப் மறுப்பு: ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடும் வீ...
`சீமான் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்!' - வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசியதாக, வருண் குமார் தரப்பு குற்றம்சாட்டி வந்தது. பதிலுக்கு, 'திரள்நிதி சீமான்' என்று சீமான் மீது சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டியதோடு, டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எஸ் மாநாட்டில், 'நாம் தமிழர் கடைசி தடை செய்யப்பட வேண்டிய இயக்கம்' என்று பேசி, அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண் குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அந்த வழக்கு தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்றைய தினம் வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது. ஆனால், இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகவில்லை.
அதனால், வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா, 'இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்' என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். மீண்டும் அந்த வழக்கு மதியம் 3 மணிக்கு நடைபெற்றது. அப்பொழுது, திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் சீமான் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள், 'சீமான் ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் இன்று அவரால் வர முடியவில்லை. நாளை அவர் ஆஜராவார். எனவே, வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், வருண் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், 'வழக்கின் எதிரியான சீமான் சினிமா பார்க்க செல்கிறார். கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். வேறு பல நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். ஆனால், நீதிமன்ற மாண்பு என்னவென்று தெரியாமல் உள்ளார்' என குற்றம்சாட்டி வாதிட்டார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து, 'நாளை கண்டிப்பாக நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.