ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!
Disclosure of Assets: `769 நீதிபதிகளில் 95 பேரே...'- சொத்து விவர வெளியீடு விவகாரத்தில் நடப்பதென்ன?
சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதும், அதற்குப் பிறகு அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதும் பெரும் சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து நீதித்துறையின் நேர்மை குறித்து பலத்த கேள்விகள் அனைத்து தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்டது.
குறிப்பாக நீதிபதிகளின் சொத்து விவரங்கள் சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதும், பிறகு அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதும் என்பது தொடர்கதையாகவே நீதித்துறையில் இருக்கிறது.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி...
எனவே, கடந்த ஒன்றாம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற அனைத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பகிரங்கமாக அறிவிக்க ஒப்புக் கொண்டனர்.
நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிபதிகளின் சொத்து விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
769 நீதிபதிகளில் வெறும் 95 நீதிபதிகள் மட்டுமே...
இதில், 769 உயர் நீதிமன்ற நீதிபதிகளில், 95 பேர் (12.35%) மட்டுமே தங்கள் சொத்துகள் குறித்த தகவல்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் 44 பேரில் 41 பேரும், இமாச்சலப் பிரதேசத்தின் 12 நீதிபதிகளில் 11 பேரும் தங்கள் சொத்துகளின் விவரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் 38 நீதிபதிகளில் 7 பேர் மட்டுமே சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதேபோல சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 16 பேரில் ஒருவரும், தமிழ்நாட்டின் 65 நீதிபதிகளில் 5 பேரும் தங்கள் சொத்துகளின் விவரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.

நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடாமல் இருப்பது அந்தந்த மாநிலத்தின் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை, பொது பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்துக் கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
ஏப்ரல் 2025 நிலவரப்படி, 33 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 30 பேர் தங்கள் சொத்துக்களின் விவரங்களை அறிவித்துள்ளனர். விரைவில் மற்ற நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடுவார்கள் என உறுதி செய்கிறது உச்ச நீதிமன்றம்.