முட்டை, ஜூஸ் வியாபாரிகளுக்கு கோடிகளில் வந்த வருமான வரி நோட்டீஸ் - நமக்கு வந்தால் என்ன செய்வது?
மத்திய பிரதேசத்தை சேர்ந்த முட்டை வியாபாரிக்கு ரூ.6 கோடி வருமான வரி நோட்டீஸ், உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஜூஸ் வியாபாரிக்கு ரூ.7.5 கோடி வருமான வரி நோட்டீஸ்...
இப்படியான செய்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கின்றன.
அது எப்படி இவ்வளவு பெரிய தொகை வருமான வரியாக வரும்... இது சரியா... போன்ற ஏகப்பட்ட கேள்விகள் நம் மனதில் தோன்றும். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஆடிட்டர் S. சதீஷ் குமார்.

"இப்போது பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய மால்கள் வரை யு.பி.ஐ-யில் தான் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றது.
மக்களும் தங்களது கட்டணத் தொகையை சில கிளிக்குகள் மூலம் யு.பி.ஐ-யில் கட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால், அனைத்து பரிவர்த்தனைகளும் பதிவாகிவிடுகின்றனர்.
இன்னொரு பக்கம், எவ்வளவுக்கு எவ்வளவு பரிவர்த்தனைகள் நடக்கின்றதோ, அதே அளவுக்கு சிறு, குறு வியாபாரிகள் பணத்தை வங்கிகளில் இருந்தும், ஏ.டி.எம்களில் இருந்தும் தங்களது செலவுகளுக்காக எடுக்கின்றனர். இதுவும் பதிவாகிவிடுகின்றது.
கட்டணங்கள் பதிவாகும்போது..!
இவ்வளவு வியாபாரங்கள் இப்போது தான் நடக்கின்றதா என்று கேட்டால் 'இல்லவே இல்லை'. முன்பும் நடந்திருக்கின்றது தான். ஆனால், யு.பி.ஐ இல்லாத காலத்தில் அல்லது அவ்வளவாக பிரபலமாகாத காலத்தில் மக்கள் அதை பயன்படுத்தவில்லை.
அதனால், அந்தக் கட்டணங்கள் அனைத்தும் பணங்களாக மட்டுமே புழங்கின. அதனால், அதற்கான ஆதாரங்கள் எங்கேயும் பதிவாகவில்லை.
இப்போது அப்படி இல்லை. இந்தக் கட்டணங்கள் பதிவாகும்போது, அரசிடம் இருந்து வருமான வரி நோட்டீஸ் வருகின்றது.

இல்லவே இல்லை!
இப்படி நோட்டீஸ் வரும் பலர், 'எங்களுக்கு அவ்வளவு வியாபாரங்கள் ஆவதில்லை' என்று கூறுவார்கள். ஆனால், அது உண்மையாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. அவர்கள் பெயரில் ஏகப்பட்ட சொத்துகள் இருக்கும். அவை கணக்கிலேயே வந்திருக்காது.
காரணம், முன்னர் நடந்த வியாபாரம் அனைத்தும் பணத்திலேயே நடந்திருக்கும். அவர்களிடம் அவ்வளவு பணம் உள்ளது என்பது அரசுக்கு தெரிந்திருக்காது. வருமான வரி நோட்டீஸும் வந்திருக்காது.
இப்போது யு.பி.ஐ பரிவர்த்தனைகளால் அனைத்தும் பதிவாகும்போது, வருமானமும் செலவும் அரசுக்கு தெரிய வந்துள்ளது. கணக்கில் வருகிறது... வருமான வரி நோட்டீஸ் வருகிறது.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நோட்டீஸ் வந்த உடன் வருமான வரியை அவர்கள் சரியாக கட்டி விட வேண்டும்.
மேலே சொன்னதுப்போல, பணம் கணக்கில் வராதப் போது அவர்களது பணம் கருப்பு பணமாகவே கருதப்படும். அதனால், இத்தனை நாள் அவர்களிடம் இருந்தது கருப்பு பணம் என்றாகிவிடும்.
சரியாக வருமான வரி கட்டுவதன் மூலம் பணத்தை வெள்ளை பணம் ஆக்கலாம்.
இது தொழில்நுட்ப தவறு இல்லையா?
இந்த மாதிரியான வருமான வரி நோட்டீஸ் 90 - 95 சதவிகிதம் தொழில்நுட்ப தவறாக இருப்பதில்லை.
நோட்டீஸ் வந்த உடன் என்ன செய்ய வேண்டும்?
முதலில், நோட்டீஸில் வந்திருப்பதுப்போல, வங்கி கணக்கில் அவ்வளவு தொகைக்கு பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
அது சரியாக இருந்தால், உடனடியாக கட்டி விடுவது நல்லது.
இல்லை... அவ்வளவு பணம் வரவில்லை என்பவர்கள் அருகில் இருக்கும் வருமான வரி அலுவலகத்தை அணுகி அதற்கான தகவல்களை கேட்டு பெற்று, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
இப்படியும் தவறுகள் நடக்கும்..!
சில நேரங்களில், வருமான வரி நோட்டீஸில் தவறுதலாக குறிப்பிட்ட நபரின் பான் எண் அல்லது போன் நம்பர் கொடுக்கப்பட்டிருக்கலாம். இதை செக் செய்து புகார் கொடுத்து, அதை சரி செய்ய வேண்டும்.
சில பணக்காரர்கள் தங்களது வாட்ச் மேன், டிரைவர் போன்றவர்களின் பெயரில் வங்கி கணக்கு ஆரம்பித்து பரிவர்த்தனைகளை செய்துவருவர். அந்த வாட்ச் மேன் அல்லது டிரைவர் வேலை விட்டு சென்றப்பிறகு, அவருக்கு வருமான வரி நோட்டீஸ் வரலாம். இவர்கள் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம்.
அரசிடமும் தவறு உள்ளது!
அரசு ஜி.எஸ்.டி வரியில் டி.டி.எஸ் பிடிக்கும். உதாரணத்திற்கு ஒருவர் டி.டி.எஸ்ஸாக ரூ.1 லட்சம் கட்ட வேண்டியதாக இருக்கும். ஆனால், அவர் ஜி.எஸ்.டி டர்ன்ஓவர் என ரூ.1 கோடியை காண்பித்திருப்பார்.
ஆனால், ஒரு கோடி டர்ன்ஓவர் காட்டியதை விட்டுவிட்டு, ஏன் ரூ.1 லட்ச டி.டி.எஸ்ஸிற்கு உண்டான டர்ன்ஓவரை காட்டவில்லை என்கிற பிரச்னை எழுகிறது. ஆனால், ஜி.எஸ்.டி டர்ன்ஓவர்க்குள்ளேயே இரண்டும் அடங்கிவிடும்.
இரண்டும் தனித்தனியாக கட்டினால் அது இரட்டை வரி ஆகிவிடும். இந்த இரண்டையும் அரசு இணைக்க வேண்டும்.
இந்த மாதிரியான தவறை அரசும் செய்கிறது. அதை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும். ஆனால், இதை அரசு செய்வதில்லை." என்று கூறுகிறார்.