ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஒரே மேடையில் மாறிமாறி புகழ்ந்து பேசிக்கொண்ட சீமான், அண்ணாமலை!
சென்னையில் தனியார் கல்லூரி விழாவில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் கலந்துகொண்டு ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
அந்தவகையில், தமிழ்நாட்டில் கடந்த பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட அதிமுக - பாஜக கூட்டணி 2023-ல் கருத்து வேறுபாடுகள் காரணமாக உடைந்த நிலையில் தற்போது 2026 தேர்தலில் மீண்டும் இணைவதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில நாள்களுக்கு முன்பு தில்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருந்தார். அமித் ஷாவும், அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் கூறியிருந்தார்.
பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த நிர்வாகி நயினார் நாகேந்திரன் ஆகியோர் தில்லியில் முகாமிட்ட நிலையில் பின்னர் அமைச்சர் செங்கோட்டையனும் தில்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து தமிழகம் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியானது.
அதேபோல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் சீமான் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
மேலும் விழாவில் பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் பேசியதும் அதேபோல சீமானைப் புகழ்ந்து அண்ணாமலை பேசியுள்ளதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழாவில் பேசிய சீமான், "உலகம் முழுக்கச் செல்லும் பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும், உலகின் முதல் மொழியான தமிழ் மொழி, எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை எனக் கூறுகிறார். செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்திப் பிடிக்கிறார்.
அதேபோல தமிழகத்தில் பாஜக என்ற ஒரு கட்சி இருக்கிறது, அந்தக் கட்சி வளர்கிறது என்று தன்னுடைய செயல்களால் நிகழ்த்திக் காட்டியவர் என் அன்பு இளவல் அண்ணாமலை" என்று பேசியுள்ளார்.
அதேநேரத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிராக தாய்மொழியான தமிழ் மொழியின் அவசியம் குறித்தும் சீமான் பேசியுள்ளார்.
அதேபோல, போர்க்களத்தில் நிற்கும் ஒரு தளபதியாகத்தான் அண்ணன் சீமானைப் பார்ப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
"அண்ணன் சீமானை போர்க்களத்தில் நிற்கக்கூடிய ஒரு தளபதியாகத்தான் பார்க்கிறேன். காரணம் அவருடைய கொள்கை. கொள்கைக்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்ற நிலைப்பாட்டோடு தைரியமாக போர்க்களத்தில் போராடக் கூடியவர். அதுவே அவரை அரசியலில் ஒரு தனிப்பெரும் தலைவராக உயர்த்தியிருக்கிறது.
எனக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை, நான் தேசியத்தில் தமிழைப் பார்க்கிறேன், அவர் தமிழில் தேசியத்தைப் பார்க்கிறார். இருந்தும் அவருக்கு ஆதரவாக நான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், அரசியலில் அவர்கொண்ட நேர்மையும் நெஞ்சுறுதியும்தான். நாங்கள் இருவரும் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியாக இது இருக்கிறது" என்று பேசியுள்ளார்.
சீமான், அண்ணாமலை இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்து பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | இதற்காக சிறைக்குச் செல்லவும் தயார்: மமதா பானர்ஜி பேச்சு!