குடும்பத் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற போதை ஆசாமி - மணப்பாறையில் அதிர்ச்சி ச...
வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் வக்ஃப் சட்ட திருத்த விவகாரம் குறித்த விவாதத்தின்போது, தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, இந்த மசோதா சட்டமானது.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 12 நாள் இடைவெளிக்குப்பின் இன்று(ஏப். 7) கூடிய பேரவை கூட்டத்தொடரில், வக்ஃப் சட்ட திருத்தம் குறித்து விரிவாக விவாதிக்க ஆளுங்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி(என்.சி) கொண்டுவந்த தீர்மானத்தை அவைத்தலைவர் அப்துல் ரஹீம் ராத்தெர் நிராகரித்தார். இவ்விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
இந்த நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் அவைத்தலைவரின் நடவடிக்கைக்கு எதிராகப் பேசினர்.
தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த எம். எல்.ஏ தன்வீர் சாதிக் பேசும்போது, “ஜம்மு - காஷ்மீர் முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டதொரு பகுதி. அப்படியிருக்கும்போது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் சட்ட திருத்த மசோதா குறித்து இங்கு விவாதிக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
வக்ஃப் விவகாரம் ஜம்மு - காஷ்மீர் மக்களிடம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, நாங்கள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும்” என்றார்.
அப்போது ஒரு உறுப்பினர், ‘தமிழ்நாட்டில் வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக’ சுட்டிக்காட்டி பேசினார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர், ’வக்ஃப் விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்கு முன்பே, அதாவது ஏப். 6-ஆம் தேதிக்கு முன்னரே, தமிழ்நாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக’ குறிப்பிட்டார்.
வக்ஃப் விவகாரத்தால் கடும் கூச்சலும் குழப்பமும் நிறைந்திருந்ததால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அவை நிகழ்வுகள் அனைத்தும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.