பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நெருங்கும் இறுதிக்கட்டம்.. 9 பேரிடம் 50 கேள்விகள்; நீதிபதி அதிரடி உத்தரவு
அதிமுக ஆட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே அதிர வைத்தது. அதிமுக புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், தற்போதுவரை இந்த வழக்கு அரசியல் ரீதியாக விவாத பொருளாக உள்ளது.

இதுதொடர்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ்குமார், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளது.
தற்போது கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. அரசுத் தரப்பு விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அரசு சார்பில் 50 சாட்சியங்கள், 200 ஆவணங்கள், 40-க்கும் மேற்பட்ட மின்னணு ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

அதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடமும் கோவை நீதிமன்றத்தில் இன்று எழுத்து பூர்வமாக கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்காக 9 பேரும் இன்று காலை சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர். பாதிக்கப்பட்ட 8 பெண்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.
சட்ட விதிகள் 313 இன் கீழ் கேள்விகள் கேட்பதற்காக அவர்கள் 9 பேரும் இன்று காலை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்து பூர்வமாக பதிலளித்தனர். இந்த நடைமுறை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்து மாலை அவர்கள் மீண்டும் சேலம் மத்திய சிறை அழைத்துச் செல்லப்பட்டனர். வருகிற ஏப்ரல் 9-ம் தேதி அவர்களை மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து வாதம், பிரதி வாதம் நடைபெறவுள்ளது. வருகிற மே மாதம் இந்த வழக்குக்கான தீர்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
