கல்லூரி தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கேள்விகள்: பேராசிரியருக்குத் தடை!
கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றிய சர்ச்சையான கேள்விகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பேராசிரியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை (பொலிட்டிகல் சயின்ஸ்) தலைவராக இருப்பவர் சீமா பன்வார்.
இவர், கல்லூரியில் நடைபெற்ற தேர்வுக்கு வினாத்தாள் தயார் செய்திருந்தார். அந்த வினாத்தாளில் இரு விடைகள் கொண்ட பலதேர்வு வினாக்களில் (எம்சிக்யூ) ஆர்எஸ்எஸ் பற்றிய இரு சர்ச்சைக் கேள்விகள் இடம்பெற்றது அவரது பணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் எவ்வாறு வளர்ச்சியடைந்தது? என்கிற கேள்வி எண் 87-ல், அதற்கு விடைகளாக மத ரீதியாக அல்லது சாதி வழி அரசியலால் என்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கேள்வி அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல, கேள்வி எண் 97-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பை நக்சல்கள், ஜம்மு - காஷ்மீர் விடுதலை அமைப்புகளுடன் இணைத்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இதனால் கல்லூரியின் ஹிந்து மாணவர் அமைப்பான ஏபிவிபி பேராசிரியருக்கு எதிராகக் கடந்த வெள்ளியன்று (ஏப். 4) போராட்டம் நடத்தினர்.
போராட்டம் காரணமாக உடனடியாக இதுபற்றி கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில் வினாத்தாளைத் தயாரித்தது பேராசிரியர் பன்வார் எனத் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் சீமா பன்வார் பல்கலைக்கழகம் சார்ந்த தேர்வுகள் அனைத்திலும் வினாத்தாள் தயாரிக்கவும், விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடவும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.