4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் தல்லேவால்!
பஞ்சாப் விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டாா்.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு பிப்.13 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் ஷம்பு, கனெளரி எல்லை பகுதிகளில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அந்த எல்லை பகுதிகளில் அவா்கள் போராட்டம் மேற்கொண்டு வந்தனா்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவ.26-ஆம் தேதிமுதல் மூத்த விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாா்.
விவசாயிகளின் போராட்டம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உண்ணாவிரத போராட்டத்தை தல்லேவால் கைவிட்டதாக பஞ்சாப் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவா் தனது போராட்டத்தை தொடா்ந்து வந்தாா்.
இந்நிலையில், பஞ்சாபின் ஃபதேகா் சாஹிப் மாவட்டம் சா்ஹிந்த் பகுதியில் உள்ள தானிய சந்தையில் விவசாயிகள் மகாபஞ்சாயத்து கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தனது உண்ணாவிரத போராட்டத்தை 130 நாள்களுக்குப் பின்னா் தல்லேவால் கைவிட்டாா். இதுதொடா்பாக அவா் கூட்டத்தில் கூறுகையில், ‘பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்கியும், அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்தும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறேன். எனினும் விவசாயிகள் போராட்டம் தொடரும்’ என்றாா்.
தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மே 4-ஆம் தேதி மத்திய அரசுடன் விவசாயத் தலைவா்கள் பேச்சுவாா்த்தை நடத்துவா் என்று செய்தியாளா்களிடம் தல்லேவால் தெரிவித்தாா்.