"திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது" - சென்னை உயர் நீதிமன்றம் கூறியதன் பின்னணி என்ன?
தொல்லியல் துறையினர், திருப்பரங்குன்றம் மலை தங்களுக்குச் சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த சோலைக்கண்ணன், வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிடோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகைக் கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இக்கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளைப் பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், சமைத்துப் பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
2012-ல் மலை மீது சில சந்தேகப்படும்படியான சம்பவங்கள் நடந்துள்ளதால் மலை மீது உள்ள தர்காவிற்குச் செல்பவர்களின் அடையாள அட்டையைப் பரிசோதித்து அதன் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தனர்.
"திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்" என்றும்,
"திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கந்தர் மலை என அழைப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும்" எனக் கோரியும் "திருப்பரங்குன்ற மலையைச் சமணர் குன்று" என அறிவிக்கவும்,
"சிக்கந்தர் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணிக்குக் காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது" எனவும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையிலிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக இன்று (மார்ச் 3) விசாரணைக்கு வந்தது.
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகரக் காவல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களில், "திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 18-ம் படி கருப்பசாமி திருக்கோயில், அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பிற கோயில்களில் கால்நடைகளைப் பலியிடும் வழக்கம் உள்ளது.
ஒற்றுமையே பலம் என்பதால் தமிழக அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையைப் பேண விரும்புகிறது. அதன் அடிப்படையில் ஜனவரி 30-ஆம் தேதி இரு சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே கூட்டம் நடத்தப்பட்டது.
அதில், "தர்காவிற்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் ஆடு, கோழிகளைப் பலியிட்டுச் சமைத்து அனைவருக்கும் பரிமாறிச் சாப்பிடுவர்.
திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றவும், தங்களுடைய இந்த நடைமுறையில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்" எனவும் ஒரு மனதாக முடிவு செய்து தெரிவித்தனர்.

அதோடு இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற சமயத்தைச் சேர்ந்தவர்களும் இதுபோல வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளைப் பலியிட்டுச் சமைத்துப் பரிமாறுவது வழக்கமாக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொல்லியல்துறை தரப்பில், வழக்கு தொடர்பாகப் பதில் மனுத் தாக்கல் செய்யக் கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து அரசுத்தரப்பில், "திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் எழுந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொல்லியல் துறை தரப்பில் ஏற்க மறுத்த நிலையில், "திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்குச் சொந்தமானது என்பதால், அங்கு எதைச் செய்தாலும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், "கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள் சரியாக இல்லை" எனக் கருத்து தெரிவித்தனர்.
"தொல்லியல் துறையினர், மலை தங்களுக்குச் சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலை அனைவருக்கும் சொந்தமானது" எனத் தெரிவித்த நீதிபதிகள்,
தொடர்ந்து, "தொல்லியல்துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யலாம். திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உள்ள உத்தரவுகளைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks