ஈரானிய கொள்ளைக் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி! கொள்ளையடிக்கும் பாணி!
செந்தில் பாலாஜி: `நீங்கள் சொல்லும் தேதியில் எல்லாம் ஒத்தி வைக்க முடியாது’ - காட்டமான உச்ச நீதிமன்றம்
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமான நபர்களிடம் லஞ்சம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததால், செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தை நாடி இருந்தார். பின்னர் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அடுத்த நாளே அவர் தமிழ்நாடு அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

மீண்டும் அமைச்சரானதால்...!
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராகவும், அவர் தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றுதற்கு எதிராகவும் வித்யா குமார் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. `அதிகாரம் மிக்க அமைச்சர் பொறுப்பை மீண்டும் செந்தில் பாலாஜி ஏற்றுக் கொண்டிருப்பதால், நடைபெற்று வரும் அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையில் தாக்கம் ஏற்படலாம். அது வழக்கின் விசாரணையையும் பாதிக்கலாம். எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார்.
அமலாக்கத்துறை சார்பிலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
`அமைச்சராக தொடர விரும்புகிறாரா?’
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபயா எஸ் ஓகா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, `செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா அல்லது ஜாமீனுக்கு எதிரான வழக்குகளை நாங்கள் விரைவாக விசாரணை நடத்தட்டுமா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ``தற்போது செந்தில் பாலாஜி என்ன நிலையில் இருக்கிறாரோ, அதே நிலையில் அவர் தொடர விரும்புகிறார்” என தெரிவித்தார். அதாவது அமைச்சராக விரும்புகிறார் என்பதை தான் அவ்வாறு வழக்கறிஞர் சுட்டிக்காட்டி இருந்தார்.
`நியாயமற்றது’ - உச்ச நீதிமன்றம்
`அப்படி என்றால், வழக்கின் மீது உங்களது வாதங்களை முன் வையுங்கள்’ என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு, `வாதங்களை முன் வைப்பது தொடர்பாக தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
அதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், `சம்பந்தப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கின் விசாரணைக்காக செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகி வருகிறார். அப்படி இருக்கும்போது இவ்வாறு அவர் கேட்பது மிகவும் துரதிஷ்டவசமானது. மேலும் நியாயமற்றதும் கூட.. இந்த வழக்கை விசாரிப்பதற்காகத்தான் சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்கும்போது, அதை புரிந்து கொள்ளாமல் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க கேட்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என கடும் கோபமாக கூறினார்கள்.

இதனை அடுத்து பேசிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, `தனது செயல்பாட்டிற்காக மன்னிப்பு கேட்பதாகவும், தனது வாதங்களை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், `செந்தில் பாலாஜி தரப்புக்கு தாங்கள் தெரிவித்த தங்களது கருத்துக்களும் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும்’ என கூறியதோடு வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கேட்டபோது, `நீங்கள் சொல்லும் தேதியில் எல்லாம் ஒத்தி வைக்க முடியாது’ எனக்கூறி வழக்கின் விசாரணையை ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தேவையில்லாத காரணங்களை கூறி வழக்கின் விசாரணைகளை தாமதப்படுத்துவதாக செந்தில் பாலாஜி தரப்பிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோபப்பட்டது, இந்த வழக்கின் விசாரணையின் தீவிரத்தை காட்டுகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
