"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
ஈரானிய கொள்ளைக் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி! கொள்ளையடிக்கும் பாணி!
சென்னையில் அடுத்தடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.
இவர்கள் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியா முழுவதும் இதுபோன்று ஒரு குழுவாகச் சென்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு அவர்களது சொந்த மாநிலங்களுக்கு உடனடியாகத் தப்பிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்றும் சென்னையில் செயின் பறிப்பு சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு வெறும் 70 நிமிடங்களில் 6 இடங்களில் வயதான பெண்களை குறிவைத்து 26 சவரன் நகைகளுடன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்றபோதுதான் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக அணிந்து வந்த ஆடையை மாற்றிக்கொண்டுள்ளனர். ஆனால், காலணிகளை மாற்றவில்லை. சிசிடிவி காட்சிகளைப் பார்த்த காவல்துறையினர், குற்றவாளிகள் அணிந்திருந்த காலணியை வைத்து அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
இதில், கைதான ஜாபர் என்பவரை சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே போலீசார் என்கவுன்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளில் ஒருவர் ஹைதராபாத் செல்லவும் மற்றொருவர் மும்பை செல்லவும் தயாராக இருந்தனர். இவர்கள் ஒருவேளை சென்னையைவிட்டு தப்பியிருந்தால், இவர்களைப் பிடிக்க முடியாது என்றும், மகாராஷ்டிரத்தின் அம்பிவேலி என்ற பகுதியில் இவர்கள் இருகிறார்கள். அதற்குள் போலீஸ் சென்று இவர்களைக் கைது செய்வது என்பது இயலாத காரியம் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை மற்றொரு குற்றவாளி கர்நாடக மாநிலம் பிதர் பகுதியிலிருந்து கொண்டு வந்திருக்கிறார். சாலை அல்லது ரயில் வழியாக வாகனம் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கைதானவர்கள் உள்பட 20 பேர் கொண்ட ஈரானிய கொள்ளை கும்பல் இருக்கிறது. அதில் மூன்றாவது நபர்தான் ஜாபர் குலாம்.
இவர்கள் சென்னையிலிருந்து திரும்ப விமான டிக்கெட் முன்பதிவு செய்வதில்லை. வேலையை முடித்துவிட்டு திரும்பிப்போகும்போது என்ன விமானம் இருக்கிறதோ அதில் டிக்கெட் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். இதனால், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, புதிதாக டிக்கெட் எடுக்க வருபவர்களைக் கண்காணிக்கும்படி தகவல் கொடுக்கப்பட்டது. கொள்ளையர்கள், விமான நிலையம் வந்து சென்னையிலிருந்து அடுத்து கிளம்பும் விமானத்துக்கு டிக்கெட் கேட்டதால், அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து, காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதனால்தான் எளிதாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
யார் இந்த ஈரானிய கொள்ளையர்கள்?
கடந்த 1970ஆம் ஆண்டுகளில் ஈரான் நாட்டிலிருந்து சில நூறு மக்கள் இந்தியாவுக்குள் வந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.
இவர்கள் நாட்டுக்குள் கொள்ளையடித்து வந்தனர். இவர்களது அடுத்தடுத்த தலைமுறையினர், பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று வாழ்ந்து வந்தாலும், கொள்ளையடிப்பதையே தொழிலாக செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் பார்ப்பதற்கு காவல்துறை அல்லது ராணுவ வீரர்களைப் போல இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் கவனத்தை திசைத்திருப்பி, வழிப்பறி, செயின்பறிப்பு உள்ளிட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது இவர்கள் பாணி. இவர்கள் ஈரானை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருப்பதால் ஈரானிய கொள்ளையர்கள் என்று காவல்துறையினரால் அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் வாழும் இதே கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள், அந்த மாநிலத்தில் அல்லது அண்டை மாநிலத்தில் முக்கிய கொள்ளைக் கும்பல் வந்து கொள்ளையடிக்க முன்னேற்பாடுகளை செய்துகொடுப்பது வழக்கமாம். இவர்களில் பலருக்கும் தமிழ், ஆந்திரம் உள்ளிட்ட பல உள்ளூர் மொழிகள் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரத்தின் அம்பிவேலி மற்றும் கர்நாடகத்தின் பிதர் பகுதிகளில் ஈரானிய கொள்ளையர்கள் வாழ்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தங்களை காவல்துறை என்று கூறிக்கொண்டு, சாலையில் நடந்து செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து, கடந்த காலங்களில், சாலையில் வன்முறை நடப்பதாகவும், கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை ஒரு காகிதத்தில் மடித்து வைத்துக் கொள்ளுமாறு போக்குக் காட்டி சங்கிலிகளைப் பறித்துச் சென்ற கும்பலும் ஈரானிய கொள்ளைக் கும்பல் என்று கூறப்படுகிறது.