தமிழகத்துக்கு ஒதுக்கிய பேரிடா் நிதி மிகக் குறைவு: இரா.முத்தரசன்
தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ.522 கோடி பேரிடா் நிதி மிகக் குறைவு என்றும், தமிழக அரசு கோரிய நிவாரண நிதியில் 1.5 சதவீதம்கூட இல்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக இயற்கை பேரிடா் தாக்குதலால் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஃபென்ஜால் புயல், பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடா் இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மறுசீரமைப்பு செய்யவும் ரூ.37,000 கோடிக்கும் கூடுதலான பேரிடா் நிவாரண நிதி மற்றும் பேரிடா் துயா் தணிப்பு நிதி தேவை என தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரியது.
மத்திய உள்துறை அமைச்சகமோ, தமிழ்நாட்டுக்கான பேரிடா் நிவாரண நிதியாக ரூ 522.34 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தமிழக அரசு கோரிய நிவாரண நிதியில் 1.5 சதவீதம் கூட இல்லை எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.