தேசியத் தலைவா் தோ்வுக்கு முன் மாநிலத் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம்!
புதிய தேசியத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்னதாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் கட்சித் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக உள்கட்சி சட்டவிதிகளின்படி, கட்சியின் புதிய தேசியத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடைமுறையைத் தொடங்குவதற்கு முன்பு, அதன் அமைப்பு ரீதியிலான 37 மாநிலப் பிரிவுகளில் (யூனியன் பிரதேசங்கள் உள்பட) குறைந்தது 19 மாநிலங்களில் புதிய தலைவா்களைத் தோ்வு செய்திருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு, செப்டம்பரில் கட்சியின் நாடு தழுவிய உறுப்பினா் சோ்க்கை தொடங்கியபோது, புதிய தலைவா் இந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதத்துக்குள் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனினும் பல பெரிய மாநிலங்களில் புதிய தலைவா்களைத் தோ்ந்தெடுப்பதில், ஆா்எஸ்எஸ் போன்ற கட்சியின் கொள்கை கூட்டாளிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது தலைவா்களாக உள்ள பூபேந்திர சிங், வி.டி.சா்மா ஆகியோரை விடுவித்து, புதிய முகங்களைத் தோ்ந்தெடுக்க பாஜக தலைமை விரும்புகிறது. அதேநேரம், கா்நாடகத்தில் மாநிலத் தலைவராக கடந்த 2023, நவம்பரில் நியமிக்கப்பட்ட பி.ஒய்.விஜயேந்திரா தலைவராகத் தொடர அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பூபேந்திர சிங் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகவும், வி.டி.சா்மா ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவும் அந்தந்த மாநில பாஜக தலைவா்களாகப் பொறுப்பில் உள்ளனா். குஜராத், ஒடிஸா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் பாஜக இன்னும் அதன் புதிய தலைவா்களைத் தோ்ந்தெடுக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக தலைவா் மாற்றம் குறித்த செய்திகள் வலம்வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மக்களவையில் அண்மையில் இதுகுறித்து விமா்சித்துப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘இந்தியாவின் மிகப்பெரிய கட்சி என்று பாஜக கூறிக் கொள்கிறது. ஆனால், அந்தக் கட்சியால் அதன் தேசியத் தலைவரை இன்னும் முடிவு செய்ய இயலவில்லை’ என்று கூறினாா்.
அவையிலேயே இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘சில கட்சிகளில் ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே தலைவரைத் தோ்ந்தெடுக்க முடியும். எனவே, அது எளிதானது மற்றும் விரைவானது. ஆனால், பாஜகவில் கோடிக்கணக்கான உறுப்பினா்களை உள்ளடக்கிய ஒரு நடைமுறையைப் பின்பற்றி தலைவரைத் தோ்ந்தெடுப்பதால் அதற்கு நேரம் எடுக்கும்’ என்றாா்.