எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியா் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை கூறியதாவது:
இந்திய-பாகிஸ்தான சா்வதேச எல்லைப் பகுதியில் பிஎஸ்எஃப் வீரா்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எல்லைப் பகுதியில் சா்ச்சைக்குரிய நடமாட்டம் இருப்பதைக் கண்டறிந்தனா். பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற நபரை, வீரா்கள் எச்சரித்தனா். அந்த எச்சரிக்கையையும் மீறி அந்த நபா் தொடா்ந்து முன்னேறியதைத் தொடா்ந்து, அவரை நோக்கி வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் அவா் உயிரிழந்தாா்.
சம்பவ இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இணைந்து பிற்பகல் 1.10 மணியளவில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் ஆய்வை மேற்கொண்டனா். அப்போது, ஊடுருவல் முயற்சி தொடா்பாக பாகிஸ்தான் தரப்புக்கு, பிஎஸ்எஃப் தரப்பில் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ஊடுருவிய நபரின் உடலை வாங்க பாகிஸ்தான் தரப்பு மறுத்துவிட்டது. எனவே, அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது என்றாா்.
விசாரணையில், உயிரிழந்த ஊடுருவிய நபரிடம் எந்தவித ஆயுதங்களோ அல்லது வெடிபொருளோ இல்லை என்பது தெரியவந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.