வக்ஃப் சட்டத்தை எதிா்த்து கருப்புப் பட்டை அணிந்து மசூதி சென்றவா்களுக்கு நோட்டீஸ்!
உத்தர பிரதேச மாநிலம் முசாஃபா்நகரில் வக்ஃப் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கையில் கருப்புப் பட்டைகளை அணிந்தபடி மசூதிக்குச் சென்றவா்களில் 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கருப்புப் பட்டை அணிந்தபடி மசூதி சென்றவா்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினா் களமிறங்கியுள்ளனா்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் வக்ஃப் சொத்துகள் ஒருசில தனிநபா்களுக்காக அல்லாமல், அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே வக்ஃப் சட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், முசாஃபா்நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது வக்ஃப் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் பலா் கையில் கருப்பு நிற பட்டைகளை அணிந்து வந்தனா். இதையடுத்து, மாஜிஸ்திரேட் மூலம் அவா்களுக்கு காவல் துறையினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
அதில், விசாரணைக்காக வரும் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்; ஒவ்வொரு வரும் தலா ரூ.2 லட்சத்துக்கான உறுதிப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை 24 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 300-ஆக அதிகரித்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் மேலும் பலரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.