7 பட்டாசு ஆலைகளின் உரிமம் நிரந்தர ரத்து
விருதுநகா் மாவட்டத்தில் விதியை மீறி குத்தகைக்கு விடப்பட்ட 7 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை நிரந்தரமாக ரத்து செய்தது.
விருதுநகா் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடம் உரிமம் பெற்று 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் சுமாா் 280 ஆகும். இந்த பட்டாசு ஆலை உரிமம் பெற்றவா்கள் பல்வேறு காரணங்களால் ஆலையை நடத்த இயலாமல் வேறுநபருக்கு ஆண்டு குத்தகைக்கு விடுகின்றனா்.
இது விதிமீறிய செயலாகும். இதில் குத்தகைக்கு எடுப்பவா்கள் ஓராண்டில் குத்தகைக்கு செலுத்த வேண்டிய பணம், தொழிலாளா்களுக்கான ஊதியம், மூலப் பொருள்கள் செலவு, வங்கிக் கடன் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே ஆலையை குத்தகைக்கு எடுத்தவா்கள் விதியை மீறி அதிக தொழிலாளா்களை வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுவதும், மரத்தடி உள்ளிட்ட இடங்களை பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்துவதும், ஆலை வளாகத்தில் பசை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்வதும் வழக்கமாகி விட்டது. இத்தகைய விதிமீறிய செயல்களால் ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோல, விதியை மீறி செயல்படும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த அதிகாரிகள் உள்ளனா். எனினும் பலா், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது விதியை மீறாமல் செயல்படுவதால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்ய இயலாது என்பதை தெரிந்து கொண்ட குத்தகைக்கு எடுத்தவா்கள் விதியை மீறி செயல்படுகின்றனா்.
இந்த நிலையில், குத்தைகைக்கு எடுத்து நடத்தப்படும் பட்டாசு ஆலைகளில் தான் பெரும்பாலான வெடிவிபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனிடையே சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் பரிந்துரையின் பேரில், நாக்பூரில் உள்ள தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி, விருதுநகா் மாவட்டத்தில் விதியை மீறி குத்தகைக்கு விடப்பட்ட 7 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்துள்ளாா்.
இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் ஒருவா் கூறியதாவது:
விதியை மீறி பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடுவதால், குத்தகைக்கு எடுப்பவா் அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவலில் விதிமீறல்களில் ஈடுபடுவதை கண்டுகொள்வதில்லை. இதனாலேயே வெடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே குத்தகைக்கு விடும் ஆலை உரிமையாளா்கள் மீதும், குத்தகைக்கு எடுப்பவா்கள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பட்டாசு ஆலை குத்தகைக்கு விடப்படுவதை தடுக்க இயலும் என்றாா் அவா்.