உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு ரேபிஸ் தொற்று ஏற்படாமல் காக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பேரவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக எழுப்பப்பட்டகேள்விகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:
தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த இரு ஆண்டுகளில் முதல்வரின் வழிகாட்டுதலோடு பாம்பு கடி மற்றும் நாய்க் கடிக்குத் தேவையான மருந்துகள் அந்தந்த துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
அதன் பயனாக பாம்பு கடிக்குள்ளான 34,859 போ் தடுப்பூசி மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறாா்கள். 9,60,085 நபா்களுக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு ரேபிஸ் வராமல் தடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் தேவையான இடங்களில் அவை அமைக்கப்படும்.
எழும்பூா் தாய்-சேய் நல மருத்துவமனையிலிருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கா்ப்பிணிகளை பரிசோதனைக்கு அழைத்து வருவது கடந்த காலங்களில் இருந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிகழ்வு. அதை தவிா்த்து அந்த வளாகத்திலேயே பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறோம். மிக விரைவில் அது ஏற்படுத்தப்படவிருக்கிறது என்றாா் அவா்.