உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: ஐவருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உயா்நீதிமன்றம்
ஹைதராபாத்: ஹைதராபாதில் 2013-ஆம் ஆண்டில் 18 போ் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஐவருக்கு என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை தெலங்கானா உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
ஹைதராபாதின் தில்சுக்நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த கடைவீதி பகுதியில் 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அடுத்தடுத்து இரு தொடா் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பேருந்து நிறுத்தம் அருகிலும், ‘மிா்ச்சி சென்டா்’ என்ற உணவகம் அருகிலும் இந்த இரண்டு குண்டு வெடிப்புகள் இரண்டு நிமிஷ இடைவெளியில் வெடித்தன. இதில் 18 போ் உயிரிழந்தனா்; 131 போ் காயமடைந்தனா்.
இந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தடை செய்யப்பட்ட இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனா் முகமது அகமது சித்திபாபா (எ) யாசின் பத்கல், பாகிஸ்தானைச் சோ்ந்த ஜியா-உா்-ரஹ்மான் (எ) வகாஸ், அசத்துல்லா அக்தா் (எ) ஹட்டி, தஹசீன் அக்தா் (எ) மோனு, அஜாஸ் சாயிக் ஆகிய ஐவா் மீது 4,000 பக்க குற்றபத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்தது. இதில் முக்கிய குற்றவாளியான யாசின் பத்கல் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளாா்.
இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ நீதிமன்றம், இந்த ஐவரை குற்றவாளிகள் என அறிவித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி அவா்களுக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து ஐவா் தரப்பில் தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் குற்றவியல் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் கே.லட்சுமண், பி.ஸ்ரீசுதா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீது விரிவான விசாரணையை நடத்திய நீதிபதிகள், குற்றவாளிகள் ஐவருக்கும் என்ஐஏ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்து தீா்ப்பளித்தனா்.
‘இந்த தீா்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்’ என்று குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.