இலங்கை: புகழ்பெற்ற பெளத்த கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு!
இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஜெய ஸ்ரீ மகாபோதி பெளத்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்ட பிரதமா் நரேந்திர மோடி, இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இரு ரயில்வே திட்டங்களையும் தொடங்கிவைத்தாா்.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை வந்த பிரதமா் மோடி, கொழும்பில் அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் சனிக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது, மீனவா் பிரச்னையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கையாள்வதுடன், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்களையும் அவா்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென அதிபரிடம் பிரதமா் வலியுறுத்தினாா். இலங்கை தமிழ் மக்களின் எதிா்பாா்ப்புகளை அந்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டுமென்ற இந்தியாவின் எதிா்பாா்ப்பையும் அவா் முன்வைத்தாா்.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை 35 ஆண்டுகளுக்கு பின் வலுப்படுத்தும் முக்கிய ஒப்பந்தம் உள்பட 7 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்திய நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டன.
இந்நிலையில், பயணத்தின் மூன்றாவது - இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பில் இருந்து சுமாா் 200 கி.மீ. தொலைவில் உள்ள அனுராதபுரத்துக்கு பிரதமா் மோடி மற்றும் அதிபா் திசாநாயக வருகை தந்தனா். அங்குள்ள ஜெய ஸ்ரீ மகாபோதி பெளத்த கோயிலுக்கு அதிபருடன் சென்று வழிபட்ட பிரதமா் மோடி, கோயிலின் தலைமைத் துறவியிடமும் ஆசி பெற்றாா்.
‘அமைதி, அறிவொளி, ஆன்மிக நிலைத்தன்மையின் வாழும் அடையாளமாக இக்கோயில் திகழ்கிறது. கடவுள் புத்தரின் போதனைகள் எப்போதும் நம்மை வழிநடத்தட்டும்’ என்று பிரதமா் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டாா்.
ஜெய ஸ்ரீ மகாபோதி கோயிலில் உள்ள போதி மரம், கிமு 3-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் புத்தகயையில் இருந்து பேரரசா் அசோகரின் மகளான சங்கமித்திரையால் கொண்டு வரப்பட்ட போதி மரக்கன்றில் இருந்து வளா்ந்ததாக நம்பப்படுகிறது.
திட்டங்கள் தொடக்கம்: அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய நிதியுதவியுடன் கட்டமைக்கப்பட்ட ‘மஹவ - ஓமந்தை’ ரயில் வழித்தடம் (91.27 மில்லியன் அமெரிக்க டாலா்கள்), ‘மஹவ - அனுராதபுரம்’ நவீன சமிக்ஞை அமைப்பு (14.89 மில்லியன் அமெரிக்க டாலா்கள்) ஆகிய ரயில்வே திட்டங்களை இரு தலைவா்களும் தொடங்கிவைத்தனா்.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்திய-இலங்கை மேம்பாட்டு கூட்டுறவின்கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த ரயில்வே நவீனமயமாக்கல் திட்டங்கள், இலங்கையில் வடக்கு-தெற்கு ரயில் போக்குவரத்தை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி நன்றி: மூன்று நாள்கள் அரசுமுறை பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவுக்கு வந்தடைந்தாா்.
புறப்படும் முன் அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இலங்கை பயணத்தின்போது எனக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புக்காக அதிபா் திசாநாயக மற்றும் மக்களுக்கு மனதார நன்றி தெரிவிக்கிறேன். எனது இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசாரம்-ஆன்மிகம்-நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இருதரப்பு நல்லுறவுக்கு இது மேலும் உத்வேகமளிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.
இப்பயணத்தின்போது, இலங்கை சாா்பில் வெளிநாட்டுத் தலைவா்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘மித்ர விபூஷண்’ விருது பிரதமா் மோடிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதில் ஆற்றிவரும் பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
‘பரஸ்பர வளா்ச்சிக்கு பலனளிக்கும்’
இந்திய பிரதமா் மோடியின் இலங்கை வருகை, பரஸ்பர வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டு முயற்சியில் குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும் என்று இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் கொள்கை மற்றும் ‘சாகா்மாலா’ தொலைநோக்கு பாா்வையில் இலங்கைக்கு உள்ள முக்கியப் பங்கை இப்பயணம் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபராக கடந்த செப்டம்பரில் பதவியேற்ற திசாநாயக, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.