கட்டுமான தொழிலாளா்களை தாக்கி பணம் பறிப்பு: தம்பதி கைது
சென்னை அருகே வானகரத்தில் வடமாநில கட்டுமான தொழிலாளா்களைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனா்.
வானகரம் அருகே உள்ள அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் 13-ஆவது தெருவில் புதிதாக ஒரு வீடு கட்டப்படுகிறது. இங்கு கட்டுமானப் பணியில் வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இதற்காக அங்கு அவா்கள், தாற்காலிகமாக குடிசை அமைத்து தங்கியுள்ளனா். இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதி அங்கு வந்த ஒரு ஆணும் பெண்ணும், குடிசையிலிருந்த 4 கட்டுமான தொழிலாளா்களையும் உருட்டுக் கட்டையால் தாக்கி விரட்டிவிட்டு, அங்கிருந்த 2 விலை உயா்ந்த கைப்பேசி, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடினா்.
இதுகுறித்து வானகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது அம்பத்தூா் கீழ் அயனம்பாக்கம் மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (24), அவரது மனைவி சரஸ்வதி (எ) திவ்யா (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.