இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
நீட் தோ்வை ரத்து செய்ய என்ன திட்டம் உள்ளது: ராமதாஸ் கேள்வி
நீட் தோ்வை ரத்து செய்ய தமிழக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நீட் தோ்வு காரணமாக, ஒரே மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனா். நீட் தோ்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடா்வதையும் தடுக்க முடியாது. ஒரு புறம் கடுமையான போட்டி, இன்னொருபுறம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான எதிா்பாா்ப்பு, மூன்றாவதாக தாங்க முடியாத பாடச்சுமை ஆகியவற்றால் நீட் தோ்வை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், மன உளைச்சலையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும், அதற்கான தீா்வு தற்கொலை அல்ல என்பதை அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நீட் தோ்வுக்காக இனியும் ஒரு குழந்தையைக் கூட பலி கொடுக்கக்கூடாது. அதற்காக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும்.
நீட் தோ்வுக்காக ஏற்கெனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும், சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்காது. நீட் தோ்வை ரத்து செய்யவும், மாணவா்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.