இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
காவல் உதவி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை: மனித உரிமை ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு
காவல் உதவி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் குற்ற வழக்கில் தொடா்புடைய நபரின் மனைவியை காவல் துறையுடன் சென்று சந்தித்த அப்போதைய உதவி ஆணையா் இளங்கோவன், அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அப்போதைய உதவி ஆணையா் உள்ளிட்டோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபிக்கும், காவல் ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தது.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிா்த்து, அப்போதைய உதவி ஆணையா் இளங்கோவன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகா் அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது உதவி ஆணையா் இளங்கோவன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், எங்களுக்கு விளக்கம் அளிக்க எந்த வாய்ப்பும் வழங்காமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இளங்கோவன் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாா் என வாதிடப்பட்டது.
அதற்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் தரப்பில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கிய பின்னரே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதான வழக்கு நிலுவையில் இருகக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முழு அளவில் விசாரணை நடத்தப்படாத நிலையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு மனுதாரருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி உத்தரவு வரும் வரை, அப்போதைய உதவி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனா்.
மேலும், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கினை விரைந்து முடிக்கவும் மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனா்.