பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் வேட்டி - சட்டையுடன் பிரதமர் மோடி!
தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி - சட்டையுடன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, ராமேசுவரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இலங்கை அனுராதபுரத்தில் இருந்து எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார், பிரதமர் மோடி.
ராமேசுவரம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, ராமநாதபுரம் ஆட்சியர், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், நவாஸ்கனி எம்.பி., ஜி.கே. வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, ஹெச். ராஜா தமிழிசை சௌந்தரராஜன், கருப்பு முருகானந்தம், சரத்குமார், அரவிந்த மேனன் ஆகியோர் வரவேற்றனர்.
பாம்பன் புதிய பாலத்தை கொடியசைத்து திறந்து வைத்ததைத் தொடர்ந்து, ராமநாத சுவாமி கோயிலில் வழிபடும் அவா், ரூ.8,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதனையடுத்து, மதியம் 2 மணியளவில் மண்டபத்தில் இருந்து மதுரைக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவுபெற்றது. பிரதமரின் தேதிக்காக திறப்பு விழா தள்ளிப்போன நிலையில், பிரதமர் மோடியால் இன்று திறந்துவைக்கப்பட்டது.